நன்றாக நினைவிருக்கிறது. 13 ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார் விகடன் சார்பாக கொச்சின் வரை ஒரு டெஸ்ட் டிரைவ். கேரளா பார்டரைத் தாண்டி ஏதோவொரு இடத்தில், நம்முடன் வந்த இன்னொரு காருக்கு ஒரு குட்டி விபத்து. சுமாரான வேகத்தில் வந்த வேறொரு வாகனம், ஒரு சாலைத் திருப்பத்தில் ‘டமார்’ என இடித்ததில், அந்தக் காரை இடித்த வாகனத்துக்குப் பயங்கர சேதாரம். அந்தக் காரில் இருந்தவர்களுக்கு நல்ல வேளையாக எதுவும் இல்லை; அட, காருக்கும் சின்னக் கீறல்கள்தான்; அதுவும் பெரிதாகத் தெரியவில்லை. அந்தக் கார் – ஹிந்துஸ்தான் அம்பாஸடர். எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால்… அம்பாஸடரின் கட்டுமானம் அப்படி!
உண்மைதான்; ‘அப்துல்கலாமே அம்பாஸடரில் போறாரு’ என்றொரு சினிமா சொல்வழக்கு உண்டு. இது அப்துல் கலாமின் எளிமையையும்; அம்பாஸடரின் உறுதியையும் கூறும் சொல்வழக்கு. காரணம், வெறும் 4 லட்சத்துக்கு ‘பீரங்கி’ போன்ற கிண்ணென்ற கட்டுமானத்துடன் ஒரு செடான் கார் கிடைப்பதெல்லாம் சும்மா இல்லை.
1957–ல் பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் நிறுவனம்தான் ‘அம்பாஸடர்’ எனும் காரை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியது. மேற்கு வங்கத்தில் உள்ள உத்தர்பாரா தொழிற்சாலையில்தான் முதன் முதலில் வெள்ளை நிற அம்பாஸடர்கள், வெள்ளைக் குதிரை மாதிரி சாலைகளில் சீறின. 60 முதல் 90–கள் வரை அம்பாஸடர் கார் வைத்திருப்பதெல்லாம் ஸ்டேட்டஸ் சிம்பல். 1970–களில் எல்லாம் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரியில் சுமார் 75 சதவிகிதம் மார்க்கெட் ஷேர், ஹிந்துஸ்தான் வசம் இருந்தது. அதேபோல், அம்பாஸடர் 1960–களில் தனவான்களின் சிம்பலாக இருந்தாலும்… 1990–களிலெல்லாம் அம்பாஸடர் எளிமையின் அடையாளமாகவும் ஆனது. அட, வடமாநிலங்களில் மட்டுமில்லை; தமிழ்நாட்டிலும் டேக்ஸி மார்க்கெட்டிலும் பட்டையைக் கிளப்பியது அம்பாஸடர்.
1990–களில் தாராளமயமாக்கல் கொள்கை வந்தது. அதன் விளைவாக, புதுப் புது நிறுவனங்கள் அம்பாஸடருக்குப் போட்டியாக எகிறி நின்றன. ஆனால், நிஜத்தில் சொல்லப்போனால், அவையெல்லாம் அம்பாஸடரின் கட்டுமானத்துக்கு முன்னே ஒன்றுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும், மற்ற கார் நிறுவனங்கள் கீலெஸ் என்ட்ரி, டிஸ்க் பிரேக்ஸ் என்று வேற லெவலில் போய்க் கொண்டிருக்க… ஏசி, ‘பவர் விண்டோஸ்’ வசதி கொடுப்பதற்கே தினறியது அம்பாஸடர். அப்படி இருந்தாலும், அம்பாஸடரை வாங்கும் வாடிக்கையாளர்கள் இருக்கத்தான் செய்தார்கள். ஆனால், இது ரொம்ப நாட்கள் நீடிக்கவில்லை.
20,000 கார்கள் விற்றுக் கொண்டிருந்த அம்பாஸடர், 2000–ம் ஆண்டில் வெறும் 2,000 காராகச் சரிந்தது. விற்பனையில் செம டல் அடித்ததால்… கடன் சுமை, தயாரிப்புச் செலவு ஆகியவற்றால் திணறியது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ். அதேநேரம், காலப்போக்கில் புதுப் புது நிறுவனங்கள் தங்கள் கார்களில் அல்ட்ரா மாடர்ன் வசதிகளைக் கொண்டு வர, அம்பாஸடரின் மூச்சு 2014–ல் நின்றுபோனது.
2014 செப்டம்பர் மாதம்தான் கடைசி அம்பாஸடர், உத்தர்பாரா தொழிற்சாலையில் தயாரானது. அதேநேரம், சென்னையில் உள்ள ஹிந்துஸ்தான் தொழிற்சாலை, மிட்சுபிஷி கார்கள் தயாரிக்கப் பயன்பட்டுக் கொண்டிருந்தது. அம்பாஸடர் பிராண்டின் உரிமையை 2017–ல் வெறும் 80 கோடி ரூபாய்க்கு, (Peugeot) பெஜோ நிறுவனத்துக்கு (இதை இப்படித்தான் உச்சரிக்கணும்) சி.கே.பிர்லா குழுமம் விற்றது.
அப்படிப்பட்ட அம்பாஸடர், இப்போது 40 ஆண்டுகள் கழித்து மீண்டும் ‘கம்பேக்’ கொடுக்க இருக்கிறது என்பதுதான் மகிழ்ச்சியான செய்தி. 80 கோடிக்கு ஹிந்துஸ்தான் அம்பாஸடரை வாங்கிய பெஜோவும், பிர்லா குழுமத்தின் HMFCI (Hind Motor Financial Corporation of India)-யும் இணைந்து அம்பாஸடருக்கு உயிர் கொடுக்க முன்வந்துள்ளன. ‘அம்பாஸடர்’ எனும் பெயரில் மாற்றம் இல்லையென்றாலும், ஹிந்துஸ்தான் அம்பாஸடர் என்பதற்குப் பதிலாக ‘பெஜோ அம்பாஸடர்’ என்கிற பெயரில் வருமாம் இந்த கார். ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் இயக்குநர் உத்தம் போஸ், இந்தத் தயாரிப்பு உரிமையில் ஹிந்துஸ்தானுக்கு 59%–ம், ஐரோப்பிய பெஜோ நிறுவனத்துக்கு 41சதவிகிதமும் உரிமை என்று சொல்லியிருக்கிறார்.
அம்பாஸடரில் ஏற்கெனவே இருந்த இன்ஜின்களைப் புத்தம் புதுசாக, நன்றாக ட்யூன் செய்து, ஸ்டைல்/டிசைனையெல்லாம் மில்லினியல் டிசைனுக்கு ஏற்ப மாற்றி… நவீன கார்களுக்குக் கடும்போட்டி கொடுக்கும் வகையில் மாற்றம் காண இருக்கிறது அம்பாஸடர். ‘‘இன்ஜினுக்கான மெக்கானிக்கல் பணிகள் மற்றும் காருக்கான டிசைன் வேலைகள் முடிந்துவிட்டன. எல்லாம் அட்வான்ஸ்டு ஸ்டேஜில் இருக்கின்றன!’’ என்கிறார் உத்தம்போஸ். இன்னும் சில மாதங்களில் இன்ஜின் பற்றிய விவரங்கள் தெரியலாம். அதேபோல், பட்ஜெட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, அம்பாஸடர் சுமார் 7 – 10 லட்சம் வரைக்கு விற்பனைக்கு வரலாம். இப்போதைக்கு அம்பாஸடரைப் பற்றி வேறெந்தத் தகவல்களும் இல்லை.
கூடவே, ஒரு சுத்தமான எலெக்ட்ரிக் காராகவும் வெறித்தன ‘கம்பேக்’ கொடுக்க இருக்கிறது அம்பாஸடர் என்றும் சொல்கிறார்கள். இது உண்மைதான் என்றாலும், IC இன்ஜின் கொண்ட பெட்ரோல்/டீசல் மாடலில்தான் அம்பாஸடர் முதலில் வருமாம். எலெக்ட்ரிக் எப்போது என்று சொல்லவில்லை. ஆனால், உத்தர்பாரா தொழிற்சாலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்தான் முதலில் தயாராக இருக்கின்றனவாம். ஹிந்துஸ்தான் மோட்டார்ஸில் இருந்து அம்பாஸடரோ… எலெக்ட்ரிக் ஸ்கூட்டரோ… எதுவாக இருந்தாலும் வரவேற்கத் தயாராக இருக்கிறோம்.
இன்னும் 2 ஆண்டுகளில் அம்பாஸடர் சாலைகளில் மறுபடியும் கெத்தாகத் திரியலாம். கமலுக்கு ‘விக்ரம்’ மூலம் மெகா கம்பேக் கொடுக்க 4 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன; AMBY என்றழைக்கப்படும் அம்பாஸடருக்கு 40 ஆண்டுகள்!