டெல்லி: புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளின் மாநில வரைவு விதிகளை தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசால் தற்போது வெளியிடப்பட்டுள்ள நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கான மாநில வரைவு விதிகள் மீதான ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபணைகளை அளிக்க ஏதுவாக, கடந்த 11.04.2022 அன்று தமிழக அரசால் வெளியிடப்பட்ட மாநில வரைவு விதிகளை தமிழில் வழங்குவது தொடர்பான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.ஒன்றிய அரசு தற்போது நடைமுறையிலுள்ள 29 ஒன்றிய தொழிலாளர் நலச் சட்டங்களை உள்ளடக்கி,(1) ஊதியச் சட்டத் தொகுப்பு, 2019(2) தொழில் உறவுகள் சட்டத் தொகுப்பு, 2020(3) சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பு, 2020(4) தொழிற் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமைகள் சட்டத் தொகுப்பு, 2020ஆகிய நான்கு சட்டத் தொகுப்புகளை உருவாக்கி அவற்றை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. மேற்படி நான்கு சட்டத் தொகுப்புகளுக்கும் ஒன்றிய அரசு விதிகளும் வெளியிடப்பட்டுள்ளன. மேற்படி சட்டத் தொகுப்புகளை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த ஏதுவாக அனைத்து மாநிலங்களும் இந்நான்கு சட்டத் தொகுப்புகளுக்கு தங்கள் மாநில வரைவு விதிகளை இயற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஊதியச் சட்டத் தொகுப்பு, தொழில் உறவுகள் சட்டத் தொகுப்பு மற்றும் தொழிற் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமைகள் சட்டத் தொகுப்பு ஆகிய மூன்று சட்டத் தொகுப்புகளுக்கும் இதுவரை மாநில வரைவு விதிகள் வெளியிடப்பட்டு அவற்றின் மீது பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஆலோசனைகளையும், ஆட்சேபனைகளையும் பெற 45 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு, கடந்த 11.04.2022 அன்று தமிழக அரசின் அரசிதழில் முதனிலை அறிவிக்கைகளை (Preliminary Notifications) அரசு வெளியிட்டுள்ளது.மேற்படி பொதுமக்கள், தொழில் நிறுவன அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஆட்சேபனைகள், ஆலோசனைகளை எழுத்து மூலமாகப் பெறுவதுடன் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் நிறுவன அமைப்புகளின் கருத்தை நேரடியாக பெறுவதற்கு ஏதுவாக ஊதியச் சட்டத் தொகுப்பு மற்றும் தொழில் உறவுகள் சட்டத் தொகுப்புகளின் மாநில வரைவு விதிகள் மீது முக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் நிறுவன அமைப்புகளுடன் தொழிலாளர் ஆணையர் முன்பாக கடந்த 26.05.2022 மற்றும் 27.05.2022 அன்றும், தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமைகள் சட்டத் தொகுப்பு மாநில வரைவு விதிகள் மீது தொழிற் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இயக்குநர் முன்பாக கடந்த 13.05.2022 மற்றும் 18.05.2022 ஆகிய தேதிகளிலும் விவாதங்கள் நடைபெற்றன. இவ்விவாதக் கூட்டங்களில் கலந்து கொண்ட தொழில் நிறுவன அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் மேற்படி மூன்று சட்டத் தொகுப்புகளின் மாநில வரைவு விதிகள் மீதான தங்களின் ஆலோசனைகளையும், ஆட்சேபனைகளையும் நேரடியாகவும், எழுத்து மூலமாகவும் அளித்துள்ளன. இருப்பினும் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் இவ்வரைவு விதிகளை தமிழில் அளித்தால் தங்களுக்கும், தங்கள் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் வரைவு விதிகளை தெளிவாக புரிந்து கொண்டு தங்களின் கருத்தை தெளிவாக வெளியிட இயலுமென தெரிவித்தனர். இதனையடுத்து, மேற்படி வரைவு விதிகளை தமிழாக்கம் செய்ய வல்லுநர்கள் சிலர் நியமிக்கப்பட்டு இத்தமிழாக்கப் பணி தற்போது போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்படி மூன்று சட்டத் தொகுப்புகளின் மாநில வரைவு விதிகளும் தமிழாக்கம் செய்யப்பட்டு அவை மீண்டும் தொழிற்சங்கங்களுக்கும், தொழில் நிறுவன அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, அவற்றின் மீது அவர்களின் கருத்துக்கள் போதிய கால அவகாசம் அளிக்கப்பட்டு பெறப்படும். மேலும் அவர்களின் கருத்துக்களை நேரடியாக பெறுவதற்கு மீண்டும் விவாதக் கூட்டங்களும் நடத்தப்படும். தமிழ் வரைவு விதிகளின் மீதான கருத்துக்களை எழுத்து மூலமாகவும், நேரடி விவாதம் மூலமாகவும் பெறப்பட்ட பின்னரே இவ்வரைவு விதிகள் இறுதி செய்யப்படுமென தெரிவிக்கப்படுகிறது. இந்த அரசு எப்போதும் தொழிலாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது மற்றும் தொழிலாளர் நலன் பாதுகாப்பதில் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் 9,90,665 தொழிலாளர்கள் புதியதாக பதிவு செய்யப்பட்டு 4,06,268 பயனாளிகளுக்கு ரூ.299.02 கோடி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வீட்டு வசதித் திட்டம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பணி நேரங்களில் நின்றுகொண்டே பணிபுரிவதைத் தவிர்க்க, அவ்வப்போது பணியிடையே கிடைக்கும் தருவாயில் தாங்கள் அமர்ந்து கொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு நிறுவன வளாகத்திலும், இருக்கை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டுமென சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தி, மறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வரசானது தொழிலாளர் நலனை பாதுகாக்க உறுதிபூண்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.