அண்மையில் இலங்கைக்கு வந்த கச்சா எண்ணெய் தாங்கிய கப்பல், டுபாய் நாட்டை சேர்ந்த முகவர் ஒருவரால் கொண்டு வரப்பட்டுள்ளதென தெரியவந்துள்ளது.
அவர் நாட்டில் பிரபலமான அரசியல்வாதி ஒருவரின் மகனின் நண்பர் என இலங்கை சுதந்திர சேவை சங்கத்தின் பெற்றோலிய கிளையின் இணைத் தலைவர் ஜகத் விஜயகுணரத்ன தெரிவித்துள்ளார்.
இடைத்தரகர்கள் மூலம் எண்ணெய் கொள்முதல் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கை
நாடுகளுக்கு நாடுகள் எண்ணெய் பெறுவதற்கான முறையான அமைப்பை நிறுவ வேண்டும் என எரிசக்தி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எரிபொருளை அரசாங்கம் பெற்றுக் கொள்ளாவிட்டால் அதற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விஜயகுணரத்ன தெரிவித்துள்ளார்.
ரஷ்யா வழங்கிய கச்சாய் எண்ணெய்
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலும் ரஷ்யாவே இலங்கைக்கு முதல் கச்சாய் எண்ணெய் தொகையை வழங்கியது.
அரசாங்கம் தங்களுக்கான ஒரு தொகையை பெறலாம் என்பதால் அரபு அல்லாத நாடுகளில் இருந்து எண்ணெய் பெறுவதாக அவர் கூறியுள்ளார்.
நாடு மற்றும் மக்கள் படும் இன்னல்கள் தொடர்பில் எரிசக்தி அமைச்சு கவனம் செலுத்தவில்லை என தெரிவித்த அவர், கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருளை குறைந்த விலைக்கு வழங்க ரஷ்யா இணக்கம் தெரிவித்த போதிலும், அரசாங்கம் கவனம் செலுத்தாமை சந்தேகத்திற்குரியது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.