உதகை: கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் சிபிஎஸ்சி பள்ளிகள் எண்ணிக்கை 200-லிருந்து 1700 ஆக உயர்ந்துள்ளது, இது மாநில அரசின் பாடத் திட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துள்ளதை காட்டுகிறது என பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏபி முருகானந்தம் கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் பாஜக-வின் 8 ஆண்டுகள் சாதனை விளக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏபி முருகானந்தம் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “மே 31 முதல் வரும் 15ம் தேதி வரை பாஜக-வின் 8 ஆண்டுகள் சாதனை விளக்க கூட்டங்கள் நடத்தப்படும். மகளிர், இளைஞர்கள், சிறுபான்மையினர், விவசாயிகளின் மேம்பாட்டுக்காக பாஜக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் குறித்து இந்த கூட்டங்களில் மக்களுக்கு விளக்கப்படும். பிரதமர் மோடி சென்னையில் கடந்த மாதம் 26ம் தேதி ரூ.31,500 கோடி மதிப்பில் 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தமிழக மக்களின் நலன் கருதி பிரதமர் தமிழகத்துக்கு பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மக்கள் மருத்தங்கள் மூலம் ரூ.100 கோடிக்கு மருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகளுக்கு 11 தவணையாக ரூ.22 ஆயிரம் கோடி அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் சிபிஎஸ்சி பள்ளிகள் எண்ணிக்கை 200-லிருந்து 1700-ஆக உயர்ந்துள்ளது. இது மாநில அரசின் பாடத்திட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துள்ளதை காட்டுகிறது.
சிறு தொழில் முனைவருக்கு முத்ரா கடன் திட்டம் மூலம் ரூ.6.4 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பயனடைந்துள்ளனர். 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய ஐஐடி, ஐஐஎம் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாரமும் புதிய பல்கலைக்கழகங்கள், தினமும் 2 புதிய கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.
மருத்துவ இடங்கள் 80 சதவீதம் உயர்ந்துள்ளன. விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டுக்காக 1000 பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இதனால், பல்வேறு போட்டிகளில் வீரர்கள் சாதித்து பதக்கங்களை வென்று வருகின்றனர். தமிழகத்தில் 60 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தவர்கள் மக்களை நடுதெருவில் நிறுத்தியுள்ளனர்.
பாஜக சித்தாந்ததை ஏற்றுக்கொள்பவர்களை கட்சியின் இணைத்துக் கொள்வோம். அதிமுக உடனான கூட்டணி சித்தாந்த அடிப்படையில் இல்லை. அதிமுக சார்பில் அரைகுறையாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எங்களை அவர்கள் குறை சொல்ல கூடாது. நாங்கள் தெளிவாக உள்ளோம். மக்களுக்கு எதிரான திமுகவுடன் நாங்கள் நேரடியாக மோதுகிறோம்.
அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் வெளியிடவுள்ளோம். வரும் 5ம் தேதி மாநில தலைவர் அண்ணாமலை ரூ.100 கோடி மற்றும் ரூ.120 கோடி ஊழல் செய்த இரு அமைச்சர்கள் குறித்த விவரங்களை வெளியிடுவார். இது தொடக்கம் தான் ஊழல் செய்துள்ள அனைத்து திமுக அமைச்சர்களின் விவரங்கள் வெளியிடப்படும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
ரவுடியிஸம் அதிகரித்துள்ளது. பட்டபகலில் கொலைகள் நடக்கின்றன. தீவிரவாதிகளின் மையமாக தமிழகம் மாறி வருகிறது. இது தமிழ்நாடுக்கு மிக பெரிய அச்சுறுத்தல். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 6 பேர் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறாம்.” என்று ஏபி முருகானந்தம் கூறினார்.