பஞ்சாப் மாநிலம் மான்ஸா பகுதியில் மின் திட்டத்தில் பணிபுரிவதற்கு 263 சீனர்களுக்கு முறைகேடாக ஒரே மாதத்தில் விசா வாங்கி கொடுத்ததாகவும், அதில் 50 லட்சம் ரூபாய் பணம் பரிவர்த்தனை நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 9 இடங்களில் சோதனை நடத்தினர்.
இதனை தொடர்ந்து, கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை சிபிஐ கைது செய்தது. சீனர்களுக்கு விசா வாங்கி கொடுக்க, 50 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரியில் சிபிஐ அதிகாரிகள் பாஸ்கரை கைது செய்தனர்.
தொடர்ந்து, கார்த்தி சிதம்பரம் இந்தியா திரும்பிய 12 மணி நேரத்துக்குள் சிபிஐ முன் ஆஜராக வேண்டும் என்று, ஜாமீன் மனு மீதான விசாரணையில் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, விசா முறைகேடு வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிய காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரத்திடம் மூன்று நாள் விசாரணை நடைபெற்றது.
இதில், விசா பெற்றுத் தருவதற்காக சீன நாட்டைச் சார்ந்த எந்த ஒரு நபருக்கும் நான் உதவவில்லை என கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளித்து இருந்தார்.
இந்நிலையில், விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன், விகாஸ் மகாரியா ஆகியோரின் முன்ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தொடர்ந்து, கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன், விகாஸ் மகாரியா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
கோரிக்கையை நிராகரித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன், விகாஸ் மகாரியாவை கைது செய்ய தடை இல்லை என்று உத்தரவிட்டுள்ளது.