புதுடெல்லி: ரயில் பயணிகள் ரயிலில் கூடுதல் லக்கேஜ் எடுத்து சென்றால், 6 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே விதிகளின்படி, ரயில்களில் பயணிக்கும் பயணிகள் தாங்கள் பயணிக்கும் ரயில் பெட்டியில் 40 கிலோ முதல் 70 கிலோ வரை எடையுள்ள லக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம். கூடுதல் பொருட்களை எடுத்து சென்றால் சம்பந்தப்பட்ட பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஏற்கனவே இருந்த அபாராத தொகையை காட்டிலும் ஆறு மடங்கு அதிகமாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ரயிலில் பயணம் செய்யும் போது அதிக லக்கேஜ்களை பயணிகள் எடுத்துச் செல்ல வேண்டாம். அதிகப்படியான லக்கேஜ்களை எடுத்து சென்றால், அதற்கான முன்பதிவு கட்டணத்தை செலுத்த வேண்டும். குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30 செலுத்த வேண்டும். ரயில் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன், பயணிகள் தங்களது பொருட்கள் குறித்த விபரங்களை முன்பதிவு நிலையத்தின் லக்கேஜ் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது முன்கூட்டியே லக்கேஜ் விபரங்களை முன்பதிவு செய்யலாம். குறைந்த பட்ச அத்தியாவசிய பொருட்களை கொண்டு பயணிக்குமாறு பயணிகளை கேட்டுக் கொள்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.