கேரளாவில் மீண்டும் பரவுகிறது- பறவை காய்ச்சலுக்கு 12 வயது சிறுமி பலி

திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவுவதாக சுகாதார துறையினருக்கு தெரியவந்தது.

இதையடுத்து மாநில சுகாதார துறையினர் கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அங்குள்ள பறவை பண்ணைகளிலும் சோதனை மேற்கொண்டனர். அதோடு நோய் பாதித்த பறவைகள் உள்ளனவா? என கால்நடை துறை அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 12 வயது ஆன இரட்டை சகோதரிகளுக்கு லேசான காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதன் முடிவுகள் வரும்முன்பு சிறுமிகளின் உடல்நிலை மோசமானது. உடனே அவர்களை கொய்லாண்டியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இரட்டை சகோதரிகளில் ஒருவரான ரிதுநந்தா பரிதாபமாக இறந்தார்.

இன்னொரு சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமி இறந்த பின்னர்தான் அவரது ரத்த மாதிரி ஆய்வு முடிவுகள் வந்தன. அதில் அவருக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பகுதியில் சுகாதார துறையினர் மீண்டும் ஆய்வு செய்தனர். அங்கு தடுப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.