கோவில்பட்டி கடலை மிட்டாய் வாங்க ஆசையா? – அஞ்சல் துறை மூலம் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலை மிட்டாயை அஞ்சல்துறை மூலம் பணம் செலுத்தி வீட்டிலிருந்தபடியே பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கரிசல் மண் பூமியான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் நிலக்கடலைகளுக்கு தனி மவுசு உண்டு. இயற்கையில் இனிப்பு சுவை கொண்ட இந்த நிலக்கடலையை கொண்டு தயாரிக்கப்படும் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு உலகம் முழுவதிலும் வரவேற்பு உண்டு. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாயின் பெருமையை உலகளவில் கொண்டு செல்ல இந்திய அஞ்சல் துறை கடந்த அக்டோபர் மாதம் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டது.
image
தற்போது கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனையையும் அஞ்சல் துறை மூலம் அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது கோவில்பட்டி கடலை மிட்டாய் இனி அஞ்சலகம் மூலம் வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலிலேயே தபால்காரர் மூலம் கொண்டு சேர்க்கப்பட உள்ளது. இந்தியாவின் எந்த அஞ்சலகத்திலும் ரூ.390 கொடுத்து கடலை மிட்டாய்க்கான ஆர்டர் செய்தால் அது கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் இணையம் மூலம் பெறப்பட்டு அடுத்த ஓரிரு நாட்களில் அவர்கள் வீட்டிற்கே விரைவு அஞ்சல் மூலம் கொண்டு சேர்க்கப்படும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.
image
விரைவு அஞ்சலுக்கென தனி கட்டணம் கிடையாது. ரூ.390 செலுத்தி விரைவு தபால் மூலம் பெறப்படும் பார்சலில் மொத்தம் கால் கிலோ எடை கொண்ட 4 கடலை மிட்டாய் பாக்கெட்டுகள் இருக்கும். மேலும் வீட்டில் இருந்தபடியே தபால்காரர் மூலமாகவும் ரூ.390 செலுத்தி கடலை மிட்டாயை ஆர்டர் செய்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.