மதுரை: 400 ஆண்டுகள் பழமையான கலைநுட்பத்துடன் கூடிய மாலைக்கோயில் கண்டுபிடிப்பு

மதுரை விமான நிலையம் அருகே பரம்புபட்டியில் 400 ஆண்டுகள் பழமையான, 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான மாலைக்கோவில் கண்டறியப்பட்டுள்ளது.

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர் முனீஸ்வரன், முனைவர் லட்சுமண மூர்த்தி ஆகியோர் மாணவர்களுடன் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொள்ளும் போது, விமான நிலையம் பின்புறம் மண்ணில் புதைந்த நிலையில் கலை நுட்பத்துடன் கூடிய கி.பி.17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.
புதைந்த நிலையில் கண்டறியப்பட்ட சதிக்கல் தோரணவாயில் கலைநயத்தோடு 4 அடி உயரம் 3 அடி அகலமும் கொண்டது . கல் சிற்பத்தில் ஆண் மற்றும் பெண்ணின் தலையின் கொண்டைப் பகுதி சற்று சாய்வாகவும், ஆடவன் கையில் நீண்ட கத்தியும், அணிகலன்களுடன் கால் பகுதியை மடக்கி தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. இக்கல் சிற்பத்தை தற்போது மக்கள் மாலைக்கோயில் என்று வழிபடுகின்றனர்.
இந்த சதிக்கல் குறித்து கள ஆய்வாளர்கள் கூறியதாவது, சங்க காலம் முதல் தமிழர் கலாசாரத்தில் நடுகற்கள் வழிபாடு முறை காணப்பட்டன. குறிப்பாக மன்னர்களுக்கு இடையே ஏற்படுகின்ற போர் பூசல் மற்றும் பிற காரணங்களால் இறந்த வீரர்களுக்கு, அவர்களுடைய நினைவாக நடுகற்கள் நட்டு வழிபாடு செய்யும் முறை இருந்ததாக தெரிவிக்கின்றனர்.
image
நிரை கவர்தல், மீட்டல், எதிரிகளிடம் இருந்து நாட்டைக் காத்தல், புலி, பன்றி, யானையுடன் சண்டையிடுதல், அரசனின் வெற்றிக்காக போரிடுதல் ஆகிய காரணங்களால் இறந்த கணவனுடன் உடன்கட்டை ஏறிய மனைவிக்கு அமைக்கப்பட்ட நடுகல்லின் மேல் எழுப்பப்படும் கோயில் மாலைக்கோயில் எனப்படும்.
மாலைக்கோயில் அமைக்கப்படும் சிற்பத்தில் கணவருடன் மனைவியும் இருப்பது போன்று அமைக்கப்பட்டு இருக்கும் எனவும், இப்பெண் சுமங்கலியாக இறந்தால் என்பதை காட்ட கை உயர்த்தி இருப்பது போன்று அதில் வளையல் உள்ளிட்ட அணிகலன்கள் அணிந்தவராகவும் காணப்படும் எனவும், மனைவியின் உருவம், வீரன் உருவத்தை விட சிறியதாகவும் கைகள் மட்டும் அமைக்கும் வழக்கம் இருந்துள்ளது. இத்தகைய நடுகல்லை குடும்பத்தினருடன் ஊராரும் கோயில் அமைத்து வழிபட்டு வருவது வழக்கம். இத்தகைய கோயில்களை மாலையீடு, மாலையடி, தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்றும் அழைப்பார்.
இப்பகுதி வேளாண்மை பகுதியாகவும் வணிக சந்தை கூடம் இருந்ததாகவும், வேளாண் பகுதியை பாதுகாப்பதற்காக எல்லைப் பகுதியில் போர் வீரர்கள் நிறுத்தப்பட்டதாக அறிய முடிகிறது. அவர் உயிர் நீத்த பின்பே மனைவி உடன்கட்டை ஏறியதற்காக நடப்பட்ட கல் சதிக்கல்லாக அறியலாம். நாகரிகத்தையும், கலாசாரத்தையும் மையமாகக் கொண்ட மதுரையை சுற்றி பல குறுநில மன்னர்கள் ஆண்ட வரலாற்று தடயங்கள் புதைந்த நிலையில் கேட்பாரற்று காணப்படுகிறது. இதுபோன்ற கற்சிற்பங்கள் பாதுகாத்தல் நமது வரலாற்று சுவடுகளை அழியாமல் பாதுகாக்க முடியும் என்று கூறினார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.