ரஷ்யா – உக்ரைன் போர் உலக நாடுகளையே புரட்டி போட்டது. இப்படிப்பட்ட இந்த போர் ஆரம்பித்து 100 நாள்கள் ஆகிவிட்ட நிலையில் உலக நாடுகளில் பொருளாதாரம் எந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தன. அதுமட்டுமின்றி பணவீக்கமும் இந்த ஆண்டு ஏப்ரலில் 7.8 சதவீதமாக உயர்ந்தது.
கடந்த 2014-ம் ஆண்டுக்குப் பின் அதிகபட்சமாக பணவீக்கம் இருந்தது. மேலும் வனஸ்பதி, கோதுமை, கடுகு எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்ததற்கு காரணமும் இந்த போர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு மே 31-ம் தேதி அன்று வனஸ்பதி விலை 2021-ம் ஆண்டின் அதே நாள் விலையை விட 26.6 சதவீதம் அதிகமானது. அதேபோல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கோதுமை விலையும் 14.3 சதவீதம் உயர்ந்துள்ளது. கடுகு எண்ணெய் மற்றும் சர்க்கரையின் விலைகள் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டும் 5.1 சதவீதம் மற்றும் 4.1 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட பொருட்களின் விலையேற்றத்தைவிட கச்சா எண்ணெய் விலை உயர்வுதான் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு விழுந்த பலத்த அடி. 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 80 டாலராக இருந்த நிலையில் ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 128 டாலராக உயர்ந்தது. மே 31 அன்று கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 122.8 டாலரை எட்டியதன் மூலம் புதிய உச்சத்தை தொட்டது.
மேலும் இந்தியப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் வெளியேறியதற்கு முக்கிய காரணம் இந்த பணவீக்கம்தான். வெளிநாட்டு முதலீடுகள் திரும்பப் பெற்றதால் அதன் எதிரொலியாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்தது. போர் தொடங்கிய பிப்ரவரி 24 அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 77.53 ஆக இருந்த நிலையில் மேலும் 4 சதவீதம் சரிந்து, மே 31 அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.77.7 ஆக இருந்தது.
அதேபோல் இந்தியாவின் ஜிடிபி எண்களும் ரஷ்யா-உக்ரைன் போரால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பணவீக்கம் இன்னும் சிறிது காலத்திற்கு ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவதால் விலைவாசி உயர்வும் தொடர்ந்து இருக்கும் என கருதப்படுகிறது. இந்த நிலையில், இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி அனந்த நாகேஸ்வரன் இதுகுறித்து கூறியபோது, ‘பணவீக்கம் அதிகரித்திருப்பது உண்மை என்றாலும் பொருளாதார தேக்கநிலை இந்தியாவில் இல்லை’ என்று கூறினார்.
ஆனாலும், நிலமை எப்போது சீராகும் என்பதற்கான தகவல் கண்ணுக்கு எட்டிய தூரம் தெரியவில்லை. இந்த நெருக்கடியான நேரத்திலும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 2021- 22 நிதியாண்டில் 31.46 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 2.62 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியானவை. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 8.34 சதவீதமாக உயர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது.
இது 2020 – 21ம் நிதியாண்டில் 1.93 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2019 – 20ம் நிதியாண்டில் தமிழக ஏற்றுமதியின் மதிப்பு 2.12 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2021 – 22ம் நிதியாண்டில் 9.45 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் குஜராத் மாநிலம் முதல் இடத்திலும் 5.45 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் மகராஷ்டிரா மாநிலம் இரண்டாவது இடத்திலும் உள்ளன.