சென்னை: நிகழ்ச்சி ஒன்றில், தனது 17 வயதின்போது நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில், சென்னை, குருநானக் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார் தமிழக முதல்வர் ஸ்டாலின். மாணவர்களை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின் தனது கல்லூரி காலத்தில் நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்.
அதில், “போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களைப் பார்க்கும் போது நான் என்னுடைய கல்லூரிக் காலத்துக்குச் சென்று விட்டேன். 1971ல் தமிழகத்தில் இந்தி திணிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்ட நேரத்திலே, கோவையில் திமுக மாணவர் மாநாடு நடந்தது. கலைஞர் அதில் கலந்து கொண்டார். அந்த மாநாட்டின் தலைவர் தஞ்சையைச் சேர்ந்த எல்.ஜி. என்று அழைக்கப்படுகின்ற எல்.கணேசனிடம் சென்று ”இரண்டு நிமிடம் எனக்கு பேச அனுமதி வேண்டும்” என்று வாய்ப்பு கேட்டேன். அவரும் அனுமதி தந்தார்.
அப்போது நான் பேசும்போது சொன்னேன். ”இந்தி திணிக்கப்படுகிற முயற்சி நடக்கிறது. அப்படி திணிக்கப்படுகிற நேரத்தில் அதனை எதிர்த்து போராட மாணவர் பட்டாளம் தயாராக இருக்க வேண்டும் என்று அனைவரும் சொன்னார்கள். அப்படிப்பட்ட மாணவர் பட்டாளத்தில் என்னையும் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு தாருங்கள்” என்று ஒரு வேண்டுகோள் வைத்து சொன்னேன்.
அது எந்த பட்டியலாக இருந்தாலும், தியாகம் செய்யக்கூடிய பட்டியலாக இருந்தாலும் அதிலே என்னையும் சேர்த்துக் கொள்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று சொன்னேன். மொழிக்காக, நம்முடைய இனத்துக்காக போராடுகிற நேரத்தில் உயிரை இழக்கக்கூடிய சூழ்நிலை வந்தாலும் அந்த தியாகத்தைச் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு அந்த மேடையிலே இன்னொன்றையும் சொன்னேன், என்னுடைய தந்தைக்கு நான்கு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். எனவே அந்த நான்கு ஆண்பிள்ளைகளில் ஒரு பிள்ளை போய்விடுவதால் என்னுடைய தந்தை நிச்சயம் கவலைப்பட மாட்டார். ஏன்னென்றால் மொழிக்காக, இனத்துக்காக தனயனை இழந்த தந்தை என்று அவரை நாடு பாராட்டும், போற்றும் அந்த பெருமையை வாங்கி தந்த பெருமை எனக்கு சேரும் என்று நான் அப்போது முழங்கினேன்.
அப்போது எனக்கு 17 வயது. நான் அந்த மாநாட்டில் பேசியது என்பது அவ்வளவுதான். அப்போது பேசியபோது எழுந்த கரவொலி இப்போதும் என் காதுகளில் ரீங்காரமிட்டு கொண்டு இருக்கிறது. இப்போது பரிசு வாங்கிய மாணவச் செல்வங்களைப் பார்த்தபோது உங்கள் காலத்தில் நான் இருந்தபோது நடந்தவை நினைவுக்கு வருகின்றன. சமூகநீதியும், சமத்துவமும், சகோதரத்துவமும், மனிதநேயமும், மதச்சார்பற்ற தன்மையும் கொண்ட இந்தியா தான் மக்களாட்சியின் இந்தியாவாக இருக்க முடியும். இவை அரசியல் தத்துவங்கள் மட்டுமல்ல. ஆட்சியின் தத்துவமாக மாற வேண்டும்.
இந்த அடித்தளம் கொண்டதாகத்தான் திராவிட மாடல் ஆட்சியானது இன்று தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. திராவிட மாடல் என்பது எதையும் இடிக்காது! உருவாக்கும். திராவிட மாடல் என்பதை எதையும் சிதைக்காது! சீர் செய்யும். திராவிட மாடல் என்பது யாரையும் பிரிக்காது! அனைவரையும் ஒன்று சேர்க்கும். திராவிட மாடல் என்பது யாரையும் தாழ்த்தாது! அனைவரையும் சமமாக நடத்தும். திராவிட மாடல் என்பது யாரையும் புறக்கணிக்காது! தோளோடு தோள் நின்று அரவணைக்கும். அத்தகைய அடிப்படையில் தான் இந்த திராவிட மாடல் ஆட்சி இன்றைக்கு நடைபெற்று வருகிறது.” என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.