சேலம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூப் பார்த்து வீட்டிலேயே துப்பாக்கி தயாரித்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களுக்கான உரிமைகளை காக்கும் புரட்சிகர அமைப்பாக செயல்பட திட்டம் தீட்டியதாக காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த புளியம்பட்டி பகுதியில் காவல்துறையின் கடந்த மாதம் 20 ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த இளைஞர்கள் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களை துரத்திச் சென்று பிடித்தனர்.
காவல்துறையினரின் கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணாக இருவரும் பதிலளித்ததால் மேலும் சந்தேகம் வலுத்திடவே அவர்களிடமிருந்த உடமைகளை காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்த பை ஒன்றில் துப்பாக்கி, கத்தி, முகமூடிகள் மற்றும் பாதியளவில் தயாரிக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஆகியவை மறைத்து வைக்கப்படிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இரண்டு பேரையும் கைது செய்த காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஒருவர் சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 24 வயதான நவீன் சக்ரவர்த்தி என்பதும் மற்றொரு நபர் செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த 24 வயதான சஞ்சய் பிராகஷ் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் சேலத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஒன்றாக படித்த வகுப்புத் தோழர்கள் ஆவர். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் நவீன்சக்ரவர்த்தி பி.சி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஆனால், கல்லூரி படிப்பை முடிக்காமல் வேலைக்கு சென்றுள்ளார்.
இதேபோல், சஞ்சய் பிரகாஷ் இளங்கலை பொறியியல் படித்துவிட்டு ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் அவரது தந்தையார் உயிரிழந்துவிட்டதால் தாயையும், தம்பியையும் கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா அருகே கேண்டின் ஒன்றில் வேலை பார்த்த இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் சிறிய வீடு ஒன்றை மாத வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
படிப்பில் புத்திசாலிகளாகவும், இயற்கை மீதும் ஆர்வம் கொண்டவர்களாகவும் நாட்டுப்பற்று மிக்கவர்களாகவும் இருந்த இவர்களை அந்த தனிமை இந்த சமுதாய அவலங்களும் மாற்று பாதைக்கு அழைத்துச் சென்றதாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இயற்கையையும், மக்கள் உரிமைகளையும் காக்க புரட்சியாளர்களாக உருவாக வேண்டும் என்று இவர்கள் இருவரும் தீர்மானித்துள்ளனர்.
இதற்காக குரும்பப்பட்டி பகுதியில் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத சூழலை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இருவரும் யூடியூப்பை பார்த்து துப்பாக்கி தயாரிக்க பழகியுள்ளனர். ஆனால், காவல்துறையினர் திருடர்களுக்காக விரித்த வலையில் இருவரும் சிக்கிக்கொண்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் பள்ளி நண்பரான கபிலர் என்பவரும் துப்பாக்கி தயாரிக்க உதவியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கிச்சிபாளையத்தைச் சேர்ந்த கபிலரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இந்த இளைஞர்களுக்கு ஏதேனும் புரட்சிகர அமைப்புகளோடு தொடர்பு உள்ளதா? ஆயுதங்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை எங்கே வாங்கினார்கள்? இவர்களை வேறு எவரேனும் பின்னணியிலிருந்து இயக்கினார்களா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் க்யூ பிரிவு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM