Formula E: பட்டம் வெல்லுமா மெர்சீடிஸ்? அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

ஃபார்முலா இ – எலக்ட்ரிக் கார்கள் பங்கேற்கும் உலக சாம்பியன்ஷிப் ரேஸிங் தொடர். 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தொடர், 11 சீசன்களாக நடந்துகொண்டிருக்கிறது. மின்சாரத்தால் இயங்கும் கார்கள் பங்கேற்கும் இந்தத் தொடருக்கும் சமீப காலமாக எதிர்பார்ப்பு அதிகரித்துவருகிறது. பாதி கட்டத்தை எட்டியிருக்கும் இந்த 2022-23 சீசன் பரபரப்பான கட்டத்தை அடைந்திருக்கிறது. நடப்பு சாம்பியன் மெர்சீடிஸ், ரோகிட் வென்சுரி ரேஸிங், டி.எஸ்.டெகீடா போன்ற அணிகள் பட்டத்துக்குப் போட்டியிட்டுக்கொண்டிருக்கும் நிலையில், டிரைவர்கள் சாம்பியன்ஷிப்பும் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது.

இந்த சீசனைப் பற்றிப் பார்ப்பதற்கு முன் ஃபார்முலா இ தொடரின் வரலாற்றை, அது நடத்தப்படும் முறையை சற்று புரட்டிப் பார்த்துவிடுவோம். தற்போது நடக்கும் ஃபார்முலா இ சீசனில் மொத்தம் 11 அணிகள் பங்கேற்கின்றன. மெர்சீடிஸ், போர்ஷ், நிசான், ஜாகுவார் போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள் இத்தொடரில் அணிகள் வைத்திருக்கின்றன. இந்தியாவின் மகேந்திரா நிறுவனத்தின் சார்பில் மகேந்திரா ரேஸிங் என்ற அணியும் இத்தொடரில் பங்கேற்கிறது.

மற்ற FIA தொடர்களைப் போல், இந்தத் தொடரிலும் ஃப்ரீ பிராக்டீஸ், குவாலிஃபயர், பிரதான ரேஸ் என்று மூன்று கட்டம் உண்டு. தகுதிச் சுற்று ஃபார்முலா ஒன் போல அல்லாமல் வித்தியாசமான முறையில் நடக்கும். 22 வீரர்களும் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனியாக போட்டி நடக்கும். அதன்பிறகு அரையிறுதி, இறுதி என்ற முறையில் போட்டிகள் நடத்தி போல் பொசிஷன் முடிவு செய்யப்படும். போல் பொசிஷன் பெறும் வீரருக்கு 3 புள்ளிகள் கொடுக்கப்படும். ரேஸ் புள்ளிகள் ஃபார்முலா ஒன் போலத்தான். ஒருசில சர்கியூட்களில் இரண்டு ரேஸ்கள் நடத்தப்படும்.

முதன் முதலில் நடந்த 2014-15 சீசனில் NEXTEV TCR வீரர் நெல்சன் பீகே ஜூனியர் சாம்பியன் பட்டம் வென்றார். இவர், 3 முறை ஃபார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பிரேசில் ஜாம்பவான் நெல்சன் பீகேவின் மகன். மெர்சீடிஸ் வீரர் நிக் டி ஃப்ரைதான் நடப்பு சாம்பியன். இந்த சீசன் அவர் தடுமாறினாலும், மற்றொரு மெர்சீடிஸ் வீரர் ஸ்டோஃபல் வேன்டோர்ன் இந்த சீசனுக்கான ரேஸில் முன்னணியில் இருக்கிறார்.

அணிகள் சாம்பியன்ஷிப்பை ரெனோ அணி 3 முறை வென்றிருக்கிறது. முதல் மூன்று சீசன்களையுமே அந்த அணிதான் வென்றது. ஆனால், தற்போது அந்த அணி பங்கேற்பதில்லை. அணிகள் பிரிவில் நடப்பு சாம்பியன் மெர்சீடிஸ்தான். மகேந்திரா ரேஸிங் அணி 2016-17 சீசனில் மூன்றாம் இடம் பிடித்து அசத்தியது. இந்தியாவைச் சேர்ந்த ஃபார்முலா ஒன் வீரர் கருண் சந்தோக், ஃபார்முலா ஒன் ஜாம்பவான் அயோர்டன் சென்னாவின் உறவினர் புரூனோ சென்னா ஆகியோர் இந்த அணிக்காகப் பங்கேற்றிருக்கின்றனர். இந்த சீசன் அலெக்சாண்டர் சிம்ஸ், ஆலிவர் ரோலண்ட் என இரு பிரிட்டன் டிரைவர்கள் அந்த அணிக்காக பங்கேற்றிருக்கிறார்கள்.

Formula E

இந்த சீசன் சவூதி அரேபியாவின் திரியா இ-பிரீயில் இருந்து தொடங்கியது. முதல் ரேஸில் இரு மெர்சீடிஸ் வீரர்களும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர். ஆனால், அடுத்த ரேஸில் அவர்களுள் ஒருவர் கூட போடியம் ஏறவில்லை. மாறாக, ரோக்கிட் வென்சுரியின் எடுவார்டோ மொர்டாரா முதலிடத்தையும், லூகாஸ் டி கிராஸி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இந்த மாற்றம் சீசன் முழுதும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

மெக்ஸிகோவில் நடந்த மூன்றாவது ரேஸில் போர்ஷ் வீரர்கள் முதலிரு இடங்களையும் பிடிக்க, ஜாகுவார், என்விசன் அணி வீரர்கள் ரோமில் நடந்த இரண்டு ரேஸ்களிலுமே போடியம் ஏறினார்கள். அதன்பிறகு மோனகோவில் கம்பேக் கொடுத்த மெர்சீடிஸ், அந்த ரேஸில் முதலிடம் பிடித்ததோடு, பெர்லினில் நடந்த இரு ரேஸ்களில் மொத்தம் 3 போடியம் இடங்களைக் கையகப்படுத்தியது. மகேந்திரா ரேஸிங் அணியோ இதுவரை 3 ரேஸ்களில் மட்டுமே புள்ளிகளைப் பதிவு செய்துள்ளது. மொத்தம் 12 புள்ளிகளே பெற்றிருக்கும் அந்த அணி, போடியம் ஏறவில்லை.

இதுவரை நடந்திருக்கும் 8 ரேஸ்களில், 5 வீரர்கள் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்கள். 10 பேர் போடியம் ஏறியிருக்கிறார்கள். முடிவுகள் அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பதால், இந்த அணிதான் வெற்றி பெறும் என்று இப்போது எதையும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது.

Jakarta E-Prix Circuit

அடுத்த ரேஸ், இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் ஜூன் 4 நடக்கிறது. அதன்பிறகு மொராக்கோவில் ஒரு ரேஸும், நியூயார்க், லண்டன், சியோல் நகரங்களில் தலா 2 ரேஸ்களும் நடக்கவிருக்கின்றன. சீசனின் கடைசி ரேஸ், சியோலில் ஆகஸ்ட் 14ம் தேதி நடக்கும்.

அடுத்த சீசனுக்கான எதிர்பார்ப்புகள்

கடந்த திங்கள்கிழமை, ஃபார்முலா இ உலக சாம்பியன்ஷிப் பந்தயத்தை ஹைதராபாத்தில் நடத்த அனுமதி கோரப்பட்டிருக்கிறது. நவம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை நடக்கும் ஒன்பதாவது சீசனில், ஹைதராபாத்தில் ரேஸ் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஹைதராபாத் உள்பட மொத்தம் 60 நகரங்கள் இத்தொடரை நடத்த அனுமதி கோரியிருக்கின்றன. அடுத்த சீசனில் மூன்றாம் தலைமுறை மின்சாரக் கார்கள் பயன்பாட்டுக்கு வருவதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஃபார்முலா ஒன் தொடரில் முன்னணி அணியாக விளங்கிவரும் மெக்லரன் அடுத்த ஃபார்முலா இ சீசனில் பங்கேற்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.