திருமலை: ஐதராபாத்தில் பப்புக்கு சென்று திரும்பிய மைனர் பெண்ணை காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பிரபல மதுபாரான ‘பப்’ உள்ளது. இங்கு கடந்த சனிக்கிழமை 17 வயதுடைய மைனர் பெண், நண்பர் ஒருவரின் விருந்துக்கு சென்றார். விருந்து முடித்துக் கொண்டு வெளியே வந்தபோது விருந்தில் பங்கேற்ற இளைஞர்கள் சிலர், மைனர் பெண்ணை தங்களின் சொகுசு காரில் கடத்தினர். 2 மணி நேரம் சாலைகளில் சுற்றியபடி அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் மற்றொரு காரில் பப்புக்கு வெளியே இறக்கி விட்டுச் சென்று விட்டனர். வீட்டிற்கு சென்ற பின் நடந்த விவரங்களை தனது தந்தையிடம் அப்பெண் தெரிவித்தார். அவர் ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இளம் பெண்ணை மருத்துவ பரிசோதனை செய்ததில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. மேலும் பெண் அளித்த தகவல்படி சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன்படி, 5 மைனர் சிறுவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர். ஆனால், இதுவரை யார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. மைனர் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதில் ஒருவர் மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (எம்ஐஎம்) கட்சியை சேர்ந்த எம்எல்ஏவின் மகன் என்றும் மற்றொருவர் சிறுபான்மை நலவாரியத் தலைவரின் மகன் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.