புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. அதிகமாக தொற்று பரவும் 5 மாநிலங்கள், அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீப காலமாக குறைந்து வந்தது. சில நாட்கள் பலி எதுவும் இல்லாமலும் கடந்தன. இந் நிலையில், கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஆயிரத்துக்கு கீழ் இறங்கிய தினசரி தொற்று எண்ணிக்கை, 2 தினங்களுக்கு முன் மீண்டும் 2 ஆயிரத்தை கடந்தது. நேற்று முன்தினம் 3 ஆயிரத்தை கடந்தது. நேற்று இந்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது. 84 நாட்களுக்குப் பிறகு தினசரி தொற்று எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது.நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 4041 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், மொத்த தொற்று எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 68 ஆயிரத்து 585 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் 6, டெல்லியில் 2, மகாராஷ்டிரா, நாகலாந்தில் தலா ஒருவர் என கொரோனா பாதித்த 10 பேர் இறந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 651 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தொற்று பாதித்த 21,177 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி தொற்று பாதிப்பு 0.95 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு 0.73 சதவீதமாகவும் உள்ளது. குணமடைவோர் சதவீதம் 98.74. நாடு முழுவதும் இதுவரை 193.83 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இந்த மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தில், ‘கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்த வேண்டும்,’ என்று அறிவுறுத்தி உள்ளார்.