சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்திய நிலையில், இது குறித்து, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஒன்றாம் தேதி கொரோனா ஒருநாள் பாதிப்பு 94 ஆக அதிகரித்தது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 55 ஆயிரத்து 474 ஆக அதிகரித்தது.
இதில் சென்னையில் மட்டும் அன்றைய நாளில் 44 பேருக்கும், செங்கல்பட்டில் 46 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.
இதனையடுத்து, கொரோனா தொற்று அதிகரித்துள்ள சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அம்மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 2 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார்.