ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் மீது கடந்த 23 ஆம் தேதியில் இருந்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக கடந்த 12 நாட்களில் 21 ஆயிரத்து 984 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த 18 ஆயிரத்து 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக கடந்த 12 நாட்களில் 21 லட்சத்து 98 ஆயிரத்து 400 ரூபாய் வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பின் இருக்கையில் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் இந்த கடந்த 12 நாட்களில் 18 லட்சத்து 3 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.