ராமேசுவரம்: பிரதமர் மோடியால் கடந்த 2019-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட ராமேசுவரம் – தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை ரயில்வே தொடங்கி உள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்துக்காக மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடற்பகுதியில் பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு, 1914 பிப்.24-ம் தேதி போட் மெயில் ரயில் சேவை தொடங்கப்பட்டது. 1964 டிச.22-ம் தேதி தாக்கிய புயலில் தனுஷ்கோடி ரயில் பாதை முற்றிலும் அழிந்தது.
புயல் தாக்கி 55 ஆண்டுகள் கழிந்த நிலையில், ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை 17.20 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இத்திட்டத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2019 மார்ச் 1-ம் தேதி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ரயில் பாதைக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை ரயில்வே துறை தற்போது தொடங்கியுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தனுஷ்கோடி ரயில் பாதைக்காக 28.6 ஹெக்டேர் வனத்துறை நிலம், 43.81 ஹெக்டேர் மாநில அரசுக்கு சொந்தமான நிலம், 3.66 ஹெக்டேர் தனியார் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. தனுஷ்கோடியில் புயலில் மிஞ்சி இருக்கும் பழைய ரயில் நிலைய கட்டுமானங்கள் அகற்றப்பட்டு, புதிதாக ரயில் நிலையம் கட்டப்படும். தனுஷ்கோடியில் ரயில்வே நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட குடிசைகள் அகற்றப்படும்.
இந்த புதிய ரயில் பாதை, ஒற்றை வழித்தடத்தில் மின்மயமாக்கப்பட்ட அகல ரயில் பாதையாக இருக்கும். ராமேசுவரம் – தனுஷ்கோடி இடையே ஜடாயு தீர்த்தம், கோதண்டராமர் கோயில், முகுந்தராயர் சத்திரம் ஆகிய புதிய ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.