சமீபத்தில் நடந்த அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன், “அ.தி.மு.க இடத்தை பா.ஜ.க பிடிக்கப் பார்க்கிறது. இதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” என்றார். பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் நிலையில், பொன்னையனின் இந்தக் கருத்து கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக, “பாஜக வளர்ச்சி அடைந்து வருகிறது, பொன்னையன் வளரவில்லை. அவருக்கு வயதாகிவிட்டது, அவர் சொல்வதை சீரியசாக எடுத்துக் கொள்ள தேவையில்லை” என பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்தார். இருதரப்பிலும் கருத்து மோதல்கள் உருவான சூழலில், இரு கட்சியின் மேலிடத் தலைவர்களும் தலையிட்டு விவகாரத்தை மேற்கொண்டு நகர்த்தாமலிருக்க உத்தரவிட்டுள்ளனர்.
பொன்னையன் இப்படி தீப்பொறியை பற்ற வைத்ததற்கு, அவர் மனதில் இருந்த நீண்ட வருத்தம்தான் காரணம் என்கிறது அ.தி.மு.க தரப்பு. நம்மிடம் பேசிய முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஒருவர், “மாநிலங்களவை தேர்தலில் சீட் கேட்டார் பொன்னையன். ஏற்கெனவே, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தச்சை கணேசராஜா, கிருத்திகா முனியசாமி எனப் பலரும் ரேஸில் இருந்ததால், பொன்னையனின் கோரிக்கையை கட்சித் தலைமை பரிசீலிக்கக்கூட இல்லை. இதில் அவருக்கு ஏக வருத்தமாகிவிட்டது. கட்சியின் அவைத்தலைவர் பொறுப்பில் தற்காலிகமாக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். ‘இந்தப் பதவியையாவது தாருங்கள்’ என்றார் பொன்னையன். அதற்கும் எடப்பாடி பழனிசாமி மசிந்து கொடுக்கவில்லை. இதில் ஏற்பட்ட வருத்தத்தைத்தான், பா.ஜ.க மீதான தாக்குதலாக தொடுத்திருக்கிறார் பொன்னையன்.
பா.ஜ.க-வுடன் கூட்டணியிலிருப்பதை பெரும்பாலான அ.தி.மு.க நிர்வாகிகள் விரும்பவில்லை. ‘நிர்வாகிகளின் விருப்பத்தை தான் பேசும்போது, தனக்கு ஆதரவு கூடும், தனக்கு ஒரு வெளிச்சம் கிடைக்கும்’ என்பதே பொன்னையன் கணக்கு. இதற்காக, அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், ‘கட்சி நலனுக்காக பேசியவர் மீதே நடவடிக்கையா?’ என தேவையில்லாமல் கட்சிக்குள் குழப்பம் ஏற்படும். இதையெல்லாம் கணக்குப் போட்டுத்தான் பா.ஜ.க-வை தாக்கியிருக்கிறார் பொன்னையன். இது ஒருவிதத்தில், எடப்பாடிக்கு சாதகமாகிவிட்டது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணியில் 20 சீட்களை எதிர்பார்க்கிறது பா.ஜ.க. அதற்கு இப்போதே தடைபோடும் விதமாக, பொன்னையனின் பேச்சை பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறார் எடப்பாடி. ‘உங்களை கூட்டணியிலிருந்து கழற்றிவிடச் சொல்லி ஏகப்பட்ட நிர்பந்தம் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கிறது. 20 சீட் கொடுத்தால், கீழ்மட்டத்தில் எந்த அ.தி.மு.க-வினரும் பா.ஜ.க-வுக்காக வேலைப் பார்க்க மாட்டார்கள். ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையில் சீட்களை பெற்றுக் கொள்ளுங்கள்’ என பா.ஜ.க-விடம் கிடுக்குப்பிடி போட திட்டமிடுகிறார் எடப்பாடி. அதேசமயம், பொன்னையனை போனில் அழைத்து கட்சித் தலைமை கண்டித்தும் இருக்கிறது” என்றார் அந்த முன்னாள் அமைச்சர்.
இதற்கிடையே, பொன்னையனின் ஆத்திரத்தை அரசியல் ஆதாயமாக பயன்படுத்தப் பார்க்கிறதாம் சசிகலா தரப்பு. சமீபத்தில், சசிகலாவின் தூதராக பொன்னையனைச் சந்தித்திருக்கும் ‘பால்’ பிரமுகர் ஒருவர், “சின்னம்மாவை வந்து பாருங்க. கட்சி ஒற்றுமையோடு இருக்கணும், பழைய மாதிரி வலிமை பெறணும்னு தான் சின்னம்மாவும் நினைக்குறாங்க. உங்கள மாதிரி நிறையபேர், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மேல வருத்தத்துல இருக்காங்க. நீங்க வந்து சின்னம்மாவுக்கு ஆதரவு சொல்லுங்க” என்று தூபம் போட்டிருக்கிறார். அந்த தூபத்திற்கு பொன்னையன் எந்த பதிலும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.
பா.ஜ.க தரப்பிலிருந்து பொன்னையன் கருத்துக்கு எதிர் விமர்சனங்களை வைத்த வி.பி.துரைசாமி, ஹெச்.ராஜா ஆகியோரை சாந்தப்படுத்தியிருக்கிறது மாநில தலைவர் அண்ணாமலை தரப்பு. நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் இரண்டாம்கட்ட தலைவர்கள் சிலர், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் மூன்றாவது பெரிய கட்சியாக பா.ஜ.க உருவெடுத்திருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கிளை அமைப்புகள் உருவாகின்றன. பா.ஜ.க-வின் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களுக்கு எழுச்சியோடு தொண்டர்கள் திரள ஆரம்பித்திருக்கிறார்கள்.
2019 நிலைமையில், இப்போது தமிழக பா.ஜ.க இல்லை. வாக்கு சதவிகிதத்தின்படி, கூட்டணியில் உரிய பங்கீட்டை இம்முறை நிச்சயம் கேட்டுப் பெறுவோம். சமீபத்தில் சென்னை வந்திருந்த பிரதமர் மோடி, அ.தி.மு.க தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துடன் நெருக்கமாக கலந்துரையாடினார். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி ஆகியோரும் பிரதமருடன் பேசினார்கள். அப்போது, தி.மு.க அரசு தங்கள் மீது புனைந்துள்ள பொய் வழக்குகள் பற்றி வேதனையுடன் எடுத்துரைத்தனர். அனைத்தையும் கவனமாக கேட்டுக் கொண்ட பிரதமர், தன் தனிச் செயலரிடம், ‘எடப்பாடியிடம் பேசி தி.மு.க மீதான ஊழல் புகார்களையெல்லாம் கேட்டு வாங்குங்கள். லஞ்ச ஒழிப்புத்துறை தவறாக கையாளப்படுகிறதா என்பதை விசாரித்துச் சொல்லுங்கள்’ என்று அங்கேயே உத்தரவிட்டாராம்.
பிரதமரிடம் அ.தி.மு.க தலைவர்கள் இவ்வளவு ஆரோக்கியமான நல்லுறவில் இருக்கும் நிலையில், பா.ஜ.க-வை பகைத்துக் கொள்ள அக்கட்சியின் தலைவர்கள் யாரும் விரும்ப மாட்டார்கள். கட்சிக்குள் தனக்கு முக்கியத்துவம் ஏதும் கிடைக்காத நிலையில், தன் ஆற்றாமையை வெளிப்படுத்தும் விதமாகத்தான் பொன்னையன் இப்படியொரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். இரு கட்சிகளின் தலைமையும், அந்தந்த கட்சிகளின் தன்மையை புரிந்திருப்பதால், கூட்டணிக்குள் விரிசல் விழ வாய்ப்பே இல்லை” என்றனர் தீர்க்கமாக.
ஆக, இப்போதைக்கு பொன்னையன் பற்ற வைத்த நெருப்பு ஜுவாலையுடன் எழும்பி அணைய ஆரம்பித்திருக்கிறது. அ.தி.மு.க-வில் முக்கியத்துவம் கிடைக்காத சிலர், மீண்டும் இந்த நெருப்பில் பெட்ரோல் ஊற்றினால், மீண்டும் தீ ஜூவாலைகள் எழும்பலாம். இப்போதைக்கு, கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்பதே இருதரப்பு தலைவர்களிடமிருந்து வரும் சிக்னலாக இருக்கிறது.