இந்தியாவிலிருந்து துருக்கி நாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்ட கோதுமையை துருக்கி நிராகரித்ததை அடுத்து துருக்கி நாட்டின் அண்டை நாட்டிற்கு இந்தியா புத்திசாலித்தனமாக அதே கோதுமையை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மே 14-ஆம் தேதி அன்று இதுவரை இல்லாத அளவில் திடீரென கோதுமை ஏற்றுமதியை இந்தியா தடை செய்தது. உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக உலகமெங்கும் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனை அடுத்து இந்தியாவுக்கான கோதுமை தேவையை கருத்தில் கொண்டு மத்திய அரசு கோதுமை ஏற்றுமதியை தடை செய்தது.
ஏற்றுமதிக்கு தடை
உலகின் இரண்டாவது பெரிய கோதுமை உற்பத்தியாளரான இந்தியா, கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்ததால் உலக சந்தையில் கோதுமை விலை திடீரென உயர்ந்தது. இதனை அடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, தென்கொரியா, ஓமன் மற்றும் பல நாடுகள் கோதுமை ஏற்றுமதி தடையை விலக்க வேண்டும் என இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தன.
துருக்கிக்கு ஏற்றுமதி
ஆனால் அதே நேரத்தில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிப்பதற்கு முன்பே இந்தியா 56,877 டன் கோதுமையை துருக்கி நாட்டிற்கு ஏற்றுமதி செய்திருந்தது. துருக்கிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இந்த கோதுமையில் ருபெல்லா என்னும் வைரஸ் இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து இந்த கோதுமையை பெற்றுக்கொள்ள முடியாது என துருக்கி நாடு நிராகரித்தது.
ருபெல்லா வைரஸ்
இதனை அடுத்து 56,877 டன் கோதுமையும் இந்தியாவுக்கு திருப்பி கொண்டு செல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. இதுகுறித்து ஏற்றுமதி அதிகாரிகள் கூறும்போது கோதுமை ஏற்றுமதி செய்வதற்கு முன்பு சோதனை செய்யப்பட்டதாகவும், ருபெல்லா வைரஸ் உள்பட எந்த பிரச்சனையும் கண்டறியப்படவில்லை என்றும் கூறினார்கள். மேலும் துருக்கிக்கான பயண நேரம் சுமார் இரண்டு வாரங்கள் என்பதால் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தால் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பிரச்சனைக்கு வழி வகுத்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
துருக்கி
ஆனால் துருக்கி இந்த காரணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. பயணத்தின்போது தொற்று வைரஸ் பரவ வாய்ப்பில்லை என்றும், விதைகள் மற்றும் மண்ணில் மாசுபடுவதால் தான் ருபெல்லா வைரஸ் தோன்றும் என்றும் எனவே அந்த கோதுமையை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் துருக்கி பிடிவாதமாக கூறிவிட்டது.
எகிப்து
இதனை அடுத்து துருக்கி நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கோதுமையை தாய்நாட்டிற்கு திரும்ப கொண்டு வர வேண்டிய நிலையில் இந்தியா இருந்தபோது திடீரென எகிப்து நாட்டின் அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை
ஏற்கனவே எகிப்து தங்கள் நாட்டிற்கு இந்தியா கோதுமையை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில், துருக்கியால் நிராகரிக்கப்பட்ட கோதுமையை பெற்றுக்கொள்ளுமாறு எகிப்து நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து அந்த கோதுமை தற்போது துருக்கியிலிருந்து எகிப்து நாட்டிற்கு திருப்பி விட முடிவு செய்யப்பட்டது.
புத்திசாலித்தனம்
துருக்கியால் நிராகரிக்கப்பட்ட கோதுமையை புத்திசாலித்தனமாக இந்தியா, எகிப்து நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்நாட்டிற்கு விற்பனை செய்ததை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Egypt takes Indian wheat consignment Turkey rejected
Egypt takes Indian wheat consignment Turkey rejected | ருக்கி நிராகரித்த கோதுமையை அண்டை நாட்டிற்கே விற்பனை செய்த இந்தியா!