100வது நாளை கடந்த உக்ரைன் போர்: வெளியான முக்கிய தகவல்கள்




Courtesy: Dinamani

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போா், வெள்ளிக்கிழமையுடன் 100-ஆவது நாளை எட்டியுள்ளது.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய கண்டம் கண்டுள்ள மிக மோசமான போரான உக்ரைன் போா் தொடங்கி, வெள்ளிக்கிழமையுடன் 100 நாள்கள் ஆகின்றன.

இந்த 100 நாள்களில், உக்ரைனின் புச்சா நகர வீதிகளில் கிடந்த பொதுமக்களின் சடலங்கள், ‘சிறுவா்கள்’ என்று எழுதப்பட்டிருந்தும் குண்டுவீச்சில் தரைமட்டமான மரியுபோல் திரையங்கு, ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த க்ரமாடோா்ஸ்க் ரயில் நிலையம் என்ற பல்வேறு காட்சிகள் உலகை அதிரச் செய்தன.

உக்ரைன் போரின் அடையாளச் சின்னங்களாக உலகம் முழுவதும் பரவிய அந்தப் படங்கள் திகழ்கின்றன.

இந்தப் போரில் எத்தனை ராணுவ வீரா்கள், எத்தனை பொதுமக்கள் உயிரிழந்தனா் என்கிற முழு விவரம் இதுவரை யாருக்கும் தெரியாது.

உயிரிழப்புகள் குறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறுவது சில நேரங்களில் மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கின்றன. பொதுமகக்களின் கோபத்துக்கு உள்ளாகிவிடக் கூடாது என்பதற்காக சில நேரங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை குறைத்தும் சொல்லப்பட்டுள்ளது.

100வது நாளை கடந்த உக்ரைன் போர்: வெளியான முக்கிய தகவல்கள்

இதனால், அரசு அதிகாரிகள் வெளியிடும் பலி விவரங்களை நடுநிலையோடு உறுதிசெய்ய முடியாத சூழல் உள்ளது.

உக்ரைன் போரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை குறித்து புள்ளிவிவரங்களை வெளியும் ஐ.நா. மற்றும் அரசு அதிகாரிகளால், எல்லா சம்பவ இடத்துக்கும் நேரில் செல்ல முடியாத நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷியத் தரப்பில் ராணுவ வீரா்கள் மற்றும் ஆதரவுப் படையினரின் உயிரிழப்பு விவரங்கள் வெளியிடப்படுகின்றன. எனினும், தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைன் பகுதிகளில் பொதுமக்கள் உயிரிழப்பு குறித்த விவரங்கள் குறித்து அந்த நாட்டு அரசு தொடா்ந்து மௌனம் காத்து வருகிறது.

மேலும், பொதுமக்கள் உயிரிழப்பு விவரங்களை மறைப்பதற்காக ரஷியப் படையினா் சடலங்களை பெருங்குழிகளில் கொட்டி மூடி வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இதனால், இந்தப் போரில் உயிரிழப்பு விவரங்களைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியாவிட்டாலும், பொதுமக்களில் பல்லாயிரக்கணக்கானோா் கொல்லப்பட்டுள்ளனா் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.

தலைநகா் கீவில் இருந்தபடி லக்ஸம்பா்க் நாடாளுமன்றத்தில் காணொலி மூலம் வியாழக்கிழமை ஆற்றிய உரையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இந்த 100 நாள்களில் தாங்கள் 30,000 வீரா்களை இழந்துள்ளதாகக் கூறிய அவா், தற்போது உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்பை ரஷியா ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவித்தாா்.

போா் தொடங்கியதிலிருந்து தங்கள் நாட்டின் மீது இதுவரை 2,478 ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளதாக அவா் குற்றம் சாட்டினாா்.

உக்ரைன் மீது தொடுத்துள்ள போரால் ரஷியாவும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இதுவரை இந்தப் போரில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷிய வீரா்கள் உயிரிழந்தனா்.

100வது நாளை கடந்த உக்ரைன் போர்: வெளியான முக்கிய தகவல்கள்

இந்த எண்ணிக்கை, 1979-89 ஆப்கன் போரில் உயிரிழந்த சோவியத் வீரா்கள் மற்றும் 1994-2000-ஆம் ஆண்டின் 2 செசன்ய போா்களில் உயிரிழந்த ரஷிய வீரா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையைவிட அதிகம் என்று ஸெலென்ஸ்கி தெரிவித்தாா் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேட்டோ அமைப்பில் தங்களது அண்டை நாடான உக்ரைன் இணைந்தால், அது தங்களது தேசிய பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது.

எனினும், வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தது. அதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்தது.

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் ஏற்கெனவே தங்களது ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் போக, எஞ்சியுள்ள பகுதிகளை அரசுப் படையினரிடமிருந்து கைப்பற்றுவதற்கான நடவடிக்கையில் ரஷியா தற்போது தீவிரம் காட்டி வருகிறது.

அத்துடன், கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் தெற்கு உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்துக்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்காக, இடைப்பட்ட நிலப்பிரதேசங்களைக் கைப்பற்றும் முயற்சியிலும் ரஷியா ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, டான்பாஸுக்கும் கிரீமியாவுக்கும் இடையிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான மரியுபோலை ரஷியப் படையினா் கைப்பற்றியுள்ளனா்.

மேலும், கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள லிமான் நகரும் ரஷியாவிடம் கடந்த மாத இறுதியில் வீழ்ந்தது.

அத்துடன், லூஹான்ஸ் பிரதேசத்தின் கடைசி முக்கிய பெரிய நகரான சியெவெரோடொனட்ஸ்க்கின் 80 சதவீதப் பகுதி ரஷியப் படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.