தமிழ்நாட்டில் சட்ட விரோத கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. அதை தடுப்பதற்காக `ஆபரேசன் கஞ்சா வேட்டை 2.0′ எனும் பெயரில் தமிழக காவல்துறையும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. சமூக சட்ட ஒழுங்கையும், மாணவர்கள் இளைஞர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி, தமிழக அரசுக்கும் காவல்துறைக்கு சவால் விடுத்துக்கொண்டிருக்கும் கஞ்சா போதைபொருள் நூதன விற்பனை பற்றியும் அதன் பின்னணி பற்றியும் பார்ப்போம்!
`ஓராண்டில் மட்டும் 102 டன் போதைப் பொருட்கள் பறிமுதல்!’
கடந்த மே 29-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தைப் பொறுத்தவரையில் கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி போதைப் பொருட்களான குட்கா, பான்பராக், பான்மசாலா போன்ற பல்வேறு பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகான 2013 மே 23-ம் தேதி தொடங்கி 2021 மே 23-ம் தேதி வரை இதுவரையிலான ஒன்பது ஆண்டுகளில் சுமார் 799.81 டன் போதைப் பொருட்கள் தமிழ்நாடு காவல்துறை, உணவு பாதுகாப்பு துறை மூலம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த ஆட்சியில் சட்டமன்ற கூட்டத் தொடரின்போது தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், `தமிழகத்தில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது’ என்று பேசினார். கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி தமிழக முதல்வர் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அவரின் அறிவுறுத்தலின்படி, போதைப் பொருட்களை ஒழிக்க மருத்துவத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை, வியாபாரிகள் சங்க நிர்வாகிகளோடு ஒரு கூட்டத்தை நடத்தி தமிழகம் முழுவதும் போதைப்பொருட்களை விற்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது. அந்தவகையில் ஓராண்டு காலத்திற்கு மட்டும், ரூபாய் 6 கோடியே 80 லட்சம் மதிப்பிலான 102 டன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அப்படி, பறிமுதல் செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் 3,063 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், 21 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டிருக்கிறது!” என தெரிவித்தார்.
“கிராமங்கள் முதல் நகரம்வரை கஞ்சா விற்பனை அமோகம்!”
அதைத்தொடர்ந்து கடந்த மே 30-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “ எது கிடைக்கிறதோ, கிடைக்கவில்லையோ தமிழ்நாட்டில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் தி.மு.க அரசு சாதனை படைத்திருக்கிறது!” என குற்றம்சாட்டினார். மேலும், “சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கிட்டத்தட்ட 102 டன் கஞ்சா பிடிபட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். அவ்வளவு கஞ்சாவைத் தமிழ்நாட்டில் இன்றைக்கு விற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் கண்டுபிடிக்காதது எவ்வளவு இருக்கிறது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இதனால் மாணவர்கள், இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் வாழ்வே சீரழியக்கூடிய நிலையை நாம் பார்க்கிறோம்.
காவல்துறை மானியத்தில் முதலமைச்சர் தாக்கல்செய்த கொள்கை விளக்கக் குறிப்பில், சுமார் 2,200 கஞ்சா வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருந்தாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் 148 பேர்தான் கைதுசெய்திருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். 2,200 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன என்று சொன்னால், அவ்வளவு பேரையும் கைதுசெய்திருக்க வேண்டும்தானே? மற்றவர்களை ஏன் கைதுசெய்யவில்லை?” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, “ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் இதில் தலையிட்டு, கஞ்சா விற்பனை செய்துகொண்டிருப்பதால்தான் இன்றைக்கு காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. காவல்துறை சுதந்திரமாகச் செயல்பட்டால், இந்த கஞ்சா விற்பனையைத் தடை செய்யலாம். இளைஞர்களும் மாணவர்களும் காப்பாற்றப்படலாம். இன்றைக்கு அதிக அளவில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. இதையெல்லாம் இந்த அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால், ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்றைக்கு நம் இளைஞர்கள், மாணவர்களின் வாழ்வு சீரழியக்கூடிய நிலையைப் பார்க்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்” என அடுக்கடுக்காக குற்றம் சுமத்தினார்.
`ஆபரேஷன் கஞ்சா 2.0′ – நடவடிக்கை:
அதிகரித்து வரும் கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக கடந்த ஆண்டு இறுதியில், `ஆபரேஷன் கஞ்சா வேட்டை’ எனும் பெயரில் தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். முதல்கட்டமாக, `ஆபரேஷன் கஞ்சா 1.0′ மூலம் பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா போன்ற போதை பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டன. கஞ்சா விற்பனை செய்பவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். குறிப்பாக, தொடர்ச்சியாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும், கஞ்சா பொருட்கள் மற்றும் அதை கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்வது, மறைமுகமாக விற்கும் கடைகளுக்கு சீல் வைப்பது, கடத்தல்காரர்களின் வங்கிக் கணக்கை முடக்குவது என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக, `ஆபரேஷன் கஞ்சா 2.0′ மூலம் அடுத்தடுத்து நடவடிகைகள் மேலும் தீவிரமாக்கப்பட்டன. குறிப்பாக, கடந்த மார்ச் 29-ம் தேதியில் மட்டும், கோவை மாவட்டப் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்துவந்த சுமார் 32 பேர் ஒரே நாளில் கைதுசெய்யப்பட்டனர். மார்ச் முதல் ஏப்ரல் வரையிலான ஒரு மாதத்தில் மட்டும் கஞ்சா விற்பனை செய்த 2,423 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3,562 கிலோ கஞ்சா பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர்கள் பயன்படுத்திய 197 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கஞ்சா புழக்கம் அதிகரித்துவருவதைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, கடந்த மே 30-ம் தேதி, கஞ்சா கடத்தல் தொடர்பான அறிக்கையை வெளியிட்ட தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க், தென் மண்டல காவல்துறையின்கீழ் செயல்படும் 10 மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில், இரு வாரங்களில் மட்டும் 494 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 90 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களுடைய 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும்,` கஞ்சா கடத்தல், விற்பனையில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை மட்டுமின்றி, குற்றவாளிகளின் நெருங்கிய உறவினர்களின் சொத்துக்கள் சட்டப்படி முடக்கப்படும். மேலும், சில்லறை விற்பனையாளர்களின் வங்கி கணக்குகளும் முடக்கப்படும்’ என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இப்படி, தமிழக காவல்துறையின் கஞ்சா விற்பனை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துவந்துகொண்டிருக்கும் அதேசமயம் கடத்தல்காரர்களால் நூதன முறையில் கஞ்சா கடத்திவரப்பட்டு, விற்பனை செய்யும் முறையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தமிழகத்துக்கு எப்படி, யாரால் கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது என்பதையும் சுருக்கமாகப் பார்ப்போம்!
எங்கிருந்து கடத்தப்படுகிறது?
தமிழகத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள, தேனி, திண்டுக்கல், கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் வனப்பகுதிகளில் சிறிய அளவில் மறைமுகமாக கஞ்சா பயிர் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. பின்னர், கேரள, தமிழக வனத்துறை மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகளால் வெகுவாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலும், வட மாநிலங்களிலிருந்து, வட மாநிலத் தொழிலாளர்களால் தமிழகத்துக்கு கஞ்சா கடத்தி வரப்படுகிறது. குறிப்பாக, ஒடிசா, பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் மற்றும் சில வட கிழக்கு மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுகிறது. அதேபோல ஆந்திராவிலிருந்தும் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது.
எப்படி கடத்திவரப்படுகிறது?
வழக்கமாக சரக்கு லாரிகள், காய்கறி வேன்கள் மூலமாக கடத்திவரப்பட்ட கஞ்சா, எல்லையோர காவல்துறை கண்காணிப்புகள், சோதனைகளால் மாற்று வழியில் கடத்தப்பட்டு வருகின்றன. அதாவது சோதனைகள் குறைவு என்பதால் ரயில்கள் மூலம் மிக எளிதாக கஞ்சா கடத்திவரப்படுகிறது! குறிப்பாக, தமிழகத்துக்கு தொழில்செய்ய வரும் வடமாநிலத் தொழிலாளர்களால், உடமைகளுடன் மறைத்து வைத்து, ரயில்வே காவல்துறையினரின் கண்களுக்கு சிக்காமல் லாவகமாக கொண்டுவரப்படுகிறது.
எப்படி சப்ளை செய்யப்படுகிறது?
வட மாநிலங்களில் கிலோ 200 ரூபாய் என மிக சொற்ப தொகையில் கொள்முதல் செய்யப்படும் கஞ்சா, தமிழகத்துக்கு கடத்திவரப்பட்டு இங்கிருக்கும் இடைத்தரகர்கள் மற்றும் வியாபரிகளுக்கு கிலோ 20,000 ரூபாய் அளவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பின்னர் சில்லரை வியாபாரிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு, அவர்களால் சிறிய சிறிய பாக்கெட்டுகள் மூலம் இளைஞர்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது! குறிப்பாக, கடத்திவரப்படும் கஞ்சா, தமிழகத்திலுள்ள முக்கியத்தொழில் நகரங்களான தலைநகர் சென்னை மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் போன்ற மேற்கு மாவட்டங்களில் மிக அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் ஐ.டி. ஊழியர்கள், கிராமப்புற நகர்ப்புற பள்ளிக் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்தும் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.
நூதன முறையில்…
தற்போது காவல்துறை கெடுபிடிகள் அதிகமானதால், ஆம்புலன்ஸ், டிராவல் பஸ், சொகுசு கார்கள், எஸ்கார்ட் வாகனங்களில் சந்தேகத்திற்கு இடமின்றி கடத்தப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், கருவேப்பிலை பொடி, புதினா பொடி எனும் பெயரில் அமேசான் மூலமாகவும், உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் டெலிவரி பாய் வேடத்திலும் நூதன முறையில் கஞ்சா சப்ளை செய்யப்பட்டு, காவல்துறையால் பிடிபடும் சம்பவங்களும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
கஞ்சா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், அது போதுமான அளவில் இருக்கிறதா, கஞ்சா சப்ளையை முழுமையாக கட்டுப்படுத்தும் அளவில் இருக்கிறதா என்றால், கேள்விக்குறி தான். மாநிலத்தில் க்ரைம் சம்பவங்களுக்கும் இந்த கஞ்சா போதை காரணமாக இருப்பதால் அதிரடி ஆக்ஷன் மூலம் உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே மக்களின் கருத்தாக இருக்கிறது!