புதுடெல்லி,
15 மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு விரைவில் காலியாக உள்ள 57 இடங்களுக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக பா.ஜனதா, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் நடந்தது. இந்த வேட்புமனுக்கள் பரிசீலனை முடித்து, திரும்ப பெறுவதற்கான காலக்கெடுவும் நேற்றுடன் முடிவடைந்தது.
இதில் 41 இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக பா.ஜனதாவுக்கு 14 இடங்கள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் 11 இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக பா.ஜனதாவுக்கு 8 இடங்கள் கிடைத்துள்ளன.
உத்தரபிரதேசத்தில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கபில் சிபல் சுயேச்சை வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ராஷ்டிரிய லோக்தளம் தலைவராக ஜெயந்த் சவுத்ரியும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் சமாஜ்வாதி ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சமாஜ்வாதி கட்சியின் ஜாவேத் அலியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, பீகாரில் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதி உட்பட ஐந்து வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்தும் இரண்டு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, மாநிலங்களவைக்கு மீதமுள்ள இடங்களுக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.