”இதுபோன்ற திருமணங்கள் இந்து மதத்திற்கு எதிரானது” என கண்டனம் தெரிவித்துள்ளார், பாஜக பெண் பிரமுகர் சுனிதா சுக்லா.
குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்தவர் ஷாமா பிந்து (24). பட்டதாரி பெண்ணான இவர், வரும் ஜூன் 11 ஆம் தேதி தன்னை தானே திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இந்து திருமண முறைபடி அவரது திருமணம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து கஷமா பிந்து கூறும்போது, “சுய அன்பின் வெளிப்பாடாகவே இதை கருத வேண்டும். திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பமில்லை. ஆனால், மணப்பெண்ணாக இருக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.
ஷாமா பிந்துவுக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வரும் அதே சமயம் எதிர்ப்புகளும் எழத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து கண்டனம் தெரிவித்து பேசியுள்ள குஜராத் பாஜக நகரப் பிரிவின் துணைத் தலைவர் சுனிதா சுக்லா “பிந்து மனநிலை சரியில்லாதவர். இதுபோன்ற திருமணங்கள் இந்து மதத்திற்கு எதிரானது. இதனால் இந்துக்களின் மக்கள் தொகை குறையும். அவர் தன்னையே திருமணம் செய்து கொள்ள எந்த கோவிலிலும் அனுமதிக்கப்பட மாட்டார். இந்து கலாசாரத்தில் ஒரு ஆண் ஆணையோ, பெண் பெண்ணையோ திருமணம் செய்து கொள்ளலாம் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை” என கூறியுள்ளார்.
யார் இந்த ஷாமா பிந்து?
சமூகவியலில் பட்டப்படிப்பை முடித்துள்ள ஷாமா பிந்து, தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவளப் பிரிவில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவருடைய பெற்றோர் இருவரும் பொறியாளர்கள். பிந்துவின் தந்தை தென்னாப்பிரிக்காவில் உள்ளார். அவரது தாயார் அகமதாபாத்தில் இருக்கிறார். பெற்றோரின் சம்மதத்துடன் நடக்கும் இந்த திருமணத்திற்கு பிறகு, ஷாமா பிந்து கோவாவுக்கு தேனிலவு செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாம்: உ.பி மருத்துவமனை அலட்சியம்: பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தை எறும்புக் கடித்து மரணம்?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM