குஜராத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணான ஷமா பிந்து என்பவர் இரண்டு நாள்களுக்கு முன்பு வருகிற 11-ம் தேதி தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளப்போவதாகக் கூறியிருந்தார். அதாவது சுய திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும், இதற்கு தன்னுடைய பெற்றோரும் சம்மதித்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதுபோன்ற திருமணங்கள் `சோலோகேமி’ என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், பா.ஜ.க தலைவரான சுனிதா சுக்லா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சுனிதா சுக்லா, “இந்து கலாசாரத்தில் ஒரு ஆண் இன்னொரு ஆணை அல்லது, ஒரு பெண் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளலாம் என்று எங்கும் எழுதப்படவில்லை. இந்தப் பெண் எந்த கோயிலிலும் தன்னை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டாள்.
இதுபோன்ற திருமணங்கள் இந்து மதத்துக்கு எதிரானவை. இதனால், இந்துக்களின் மக்கள் தொகையானது குறையும். அதுமட்டுமல்லாமல், மதத்துக்கு எதிராக எது நடந்தாலும், எந்த சட்டமும் இங்கு மேலோங்காது” என எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதேபோல் உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணகாந்த் வகாரியாவும், இந்த விவகாரத்தில் “இந்திய சட்டங்களின்படி, உங்களை நீங்களே திருமணம் செய்து கொள்ள முடியாது. ஒரு திருமணத்தில் இரண்டு பேர் இருக்க வேண்டும். சொலோகாமி சட்டப்பூர்வமானது அல்ல” என்று தனியார் ஊடகத்திடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.