டெக்சாஸ்(அமெரிக்கா),
உலகின் டாப்-10 முன்னணி பணக்காரரும் டெஸ்லா வாகன தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பகுதியளவு பணியிடங்களை நீக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.
இதுகுறித்து டெஸ்லா நிறுவன நிர்வாகிகளுக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சலில், இப்போதிருக்கும் பணியிடங்களில் 10 சதவீதம் குறைக்கப்பட வேண்டும் என்று மஸ்க் கூறியுள்ளார். அதேபோல, ‘உலகெங்கிலும் புதிதாக யாரையும் பணியமர்த்த வேண்டாம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டெஸ்லா நிறுவனத்தில் அலுவலகங்களுக்கு வராமல், வீட்டிலிருந்தபடியே பணி செய்துவரும் முறையை அவர் தடை செய்தார். இதை தொடர்ந்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகங்களுக்கு திரும்பாமல், இன்னும் வீட்டிலிருந்தபடியே பணிகளை தொடரும் ஊழியர்கள் வேறு இடங்களில் வேலை தேடிக் கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
இப்போதைய ஸ்திரத்தன்மையமற்ற பொருளாதார நிலைக்கு மத்தியில், மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களான மெடா, உபெர் மற்றும் டுவிட்டர் ஆகிய நிறுவனங்கள் புதிதாக ஆட்களை பணியமர்த்துவதை இடைநிறுத்தியுள்ளன. அதே நேரத்தில் நெட்பிளிக்ஸ், பெலெட்டான் மற்றும் ராபின்உட் ஆகிய நிறுவனங்கள் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதனை தொடர்ந்து, எலான் மஸ்க்கிடம் இருந்து இந்த அறிக்கை வந்துள்ளது.
டெஸ்லாவில் உலகம் முழுவதும் சுமார் 1 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். அப்படியிருக்கும் போது, 10 சதவீத பணியாளர் குறைப்பு என்பது ஏறத்தாழ 10,000 பேர் வேலையை இழக்க நேரிடும்.
மேலும், டெஸ்லாவின் மின்சார வாகனங்கள் அடிக்கடி பழுதாவதைப் பற்றிய புகார்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. டெஸ்லாவின் தானியங்கி(ஆட்டோமெடிக்) கார்கள் வெளிப்படையான காரணமின்றி திடீரென பழுதடைந்து சாலையோரங்களில் நிறுத்தப்பட வேண்டிய சூழல் இருப்பதாக 750க்கும் மேற்பட்ட டெஸ்லா வாகன உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, அமெரிக்க கட்டுப்பாட்டாளர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையில், டெஸ்லா நிறுவன பங்குகள் நேற்று 7 சதவீதத்துக்கும் அதிகமாக சரிந்தன. எலான் மஸ்க் டுவிட்டரை வாங்க விரும்புவதாக முதலில் பரிந்துரைத்த சிறிது நேரத்திலேயே, ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து டெஸ்லாவின் பங்கு அதன் மதிப்பில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை இழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.