பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா சமீபத்தில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது மொஹமது நபிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக நுபுர் சர்மாவிற்கு எதிராக மகாராஷ்டிராவில் இரண்டு வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக பிரமுகரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் சிறுபான்மை சமுதாயத்தினர் நகரின் முக்கியமான பராதே மார்க்கெட்டில் கடைகளை மூடும்படி கேட்டுக்கொண்டனர்.
இதற்கு மற்றொரு தரப்பினர் கடையை மூட எதிர்ப்பு தெரிவித்தனர். பராதே மார்க்கெட்டில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் கல்வீச்சாக மாறியது. இரு பிரிவினரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். இதில் வெடிகுண்டுகளும் வீசப்பட்டது. போலீஸார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர். அதோடு கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசினர்.
தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கான்பூர் போலீஸ் கமிஷனர் விஜய் சிங் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கை காக்கவும், மேற்கொண்டு வன்முறை ஏற்படாமல் இருக்கவும் ஆயுதம் தாங்கிய 12 கம்பெனி சிறப்பு படை போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
முதல் கட்டமாக போலீஸார் 36 பேரை கைது செய்துள்ளனர். மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்காணிப்பு கேமரா உதவியுடன் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளின் சொத்துக்கள் முடப்பட்டு புல்டோசர் மூலம் அவை இடிக்கப்படும் என்று விஜய் சிங் தெரிவித்தார். மொத்தம் ஆயிரம் பேர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 40 பேர் மட்டும் அடையாளம் காணப்பட்டு முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. மொகமது நபிக்கு எதிராக கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவை கைது செய்து சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.