UPSC தேர்ச்சி பெற்றதாகத் தகவல் – நம்பியவர்களுக்கு ஏமாற்றம்; ஜார்கண்ட் பெண் விஷயத்தில் என்ன நடந்தது?

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த திவ்யா பாண்டே, சமீபத்தில் வெளியான UPSC தேர்வில் வெற்றி பெற்றதாகவும் இந்திய அளவில் 323வது ரேங்கில் தேர்வாகியதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது அவரது குடும்பத்தினர் திவ்யாவின் சார்பில் அவரை வாழ்த்தியவர்களிடமும் ஊடகத்திடமும் ‘கவனக்குறைவால் ஏற்பட்ட தவறு இது’ என மன்னிப்பு கேட்டுள்ளனர். என்ன நடந்தது?

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், 24 வயதான திவ்யா பாண்டே. அவரது தந்தை ஜெகதீஷ் பிரசாத் பாண்டே மத்திய நிலக்கரி சுரங்கத்தில் கிரேன் ஆப்ரேட்டராக பணியாற்றி 2016-ல் ஓய்வு பெற்றவர்.

திவ்யா UPSC தேர்வுகள் எழுதினார். முடிவுகள் வெளியான போது அவரது நண்பர் ஒருவர், திவ்யா பாண்டே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அழைத்துச் சொல்லியிருக்கிறார். இன்டர்நெட் கோளாறால் அவர் சொன்னதைத் திவ்யாவின் குடும்பத்தினரால் உறுதி செய்ய முடியவில்லை. அதனை உண்மையென நம்பியே அவரது குடும்பத்தினரும் மற்றவர்களும் கொண்டாடத் தொடங்கியிருக்கின்றனர்.

மத்திய நிலக்கரி சுரங்க அலுவலகத்தில் திவ்யாவை பாராட்டிய போது…

எந்தவித கோச்சிங்கும் இல்லாமல் தன் முயற்சியால் படித்தே திவ்யா பாண்டே தேர்ச்சி பெற்றது மீடியாவின் கவனத்தை ஈர்த்தது. இந்தச் செய்தி பெரிதாகப் பேசப்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகமும் மத்திய நிலக்கரி சுரங்க அதிகாரிகளும் அழைத்து திவ்யா பாண்டேவைப் பாராட்டினர்.

கவனக்குறைவால் இவர்கள் நம்பி கொண்டிருந்த தகவல், திவ்யா டெல்லிக்குச் சென்ற போதுதான் உண்மையில்லை எனத் தெரிந்திருக்கிறது. அந்தப் பெயர் தென்னிந்தியாவைச் சேர்ந்த திவ்யா.பி என்றும் அது திவ்யா பாண்டே இல்லையென்றும் உணர்ந்திருக்கிறார்கள்.

“பொய்யான செய்தியைப் பரப்பும் எந்தவிதமான உள்நோக்கமும் இதில் கிடையாது. இந்தத் தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என திவ்யா பாண்டேவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் தாங்கள் எடுக்கப் போவதில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.