துணிப்பை பயன்படுத்துவதை வலியுறுத்தி குடுகுடுப்பைகாரர் வேடத்தில் நூதன முறையில் விழிப்புணர்வு மேற்கொண்ட சமூக ஆர்வலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
பிளாஸ்டிக் பயன்பாட்டினால் கடல்வாழ் உயிரினங்கள், மற்றும் சுற்றுச் சூழலுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் பையின் தீமைகளை கருத்தில் கொண்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் ஆங்காங்கே பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை செனாய் நகர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், தன்னார்வலருமான அசோக்குமார் என்பவர் காய்கறி சந்தைகள், பலசரக்கு கடைகளில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்துவதை வலியுறுத்தி நூதன முறையில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்.
மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் சமூக ஆர்வலர் அசோக்குமார் குடுகுடுப்பைக்காரர் வேடமணிந்து தலையில் தலைப்பாகை கட்டி கையில் துணிப்பை மற்றும் மஞ்சள் பைகளை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உழவர் சந்தையில் பிளாஸ்டிக் பைகளுடன் வந்த பொதுமக்களிடம் அதனை பெற்றுக்கொண்டு துணிப்பையை இலவசமாக வழங்கினார்.
மேலும் நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது எதிர்கால சந்ததியினருக்காகவும், அடுத்த தலைமுறைகாக பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்துவோம் என குடுகுடுப்பைகாரர் போல் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM