காஷ்மீரில் நடைபெறும் படுகொலைகளுக்குப் பின்னால் பாகிஸ்தானின் தூண்டுதல் உள்ளது என்று மத்திய உளவு அமைப்புகள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் எடுத்துரைத்துள்ளன.
காஷ்மீரில் ஒரே வாரத்தில் இந்துக்கள் உட்பட 8 பேர், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும், தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிப்பது குறித்தும் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று (வெள்ளிக்கிழமை) அவசர ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த மத்திய உளவு அமைப்புகள், “காஷ்மீரில் அண்மைக்காலமாக வன்முறைகள் அதிகரித்துள்ளன. ஆனால் இது பிரிவினைவாதிகளின் போராட்டம் அல்ல. இவற்றை சில அமைப்புகள் பாகிஸ்தான் தூண்டுதலுடன் செய்கின்றன” எனத் தெரிவித்துள்ளன. எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி அதிகரித்து வருவதால் காஷ்மீர் படுகொலைகளின் பின்னால் பாகிஸ்தான் இருக்கிறது என உளவு அமைப்புகள் எடுத்துரைத்துள்ளன. காஷ்மீரில் தலிபான்கள் இல்லை என்றும் அமித் ஷாவிடம் எடுத்துரைத்தனர்.
அதேவேளையில் காஷ்மீரி பண்டிட்டுகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றலாமே தவிர அவர்களை காஷ்மீரை விட்டு வெளியேற்றுவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டது. இன அழிப்புக்கு மத்திய அரசு எப்படி காரணமாக இருக்கும். இந்த அரசு பல்வேறு கலாச்சாரங்களையும் உள்ளடக்கிய ஒற்றுமையான சமூகத்தையே உருவாக்க விரும்புகிறது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆலோசனைகள் ஒருபுறம் நடந்துவர, காஷ்மீரி பண்டிட்டுகள் “அரசு எங்களை பிணைக் கைதிகளாக்கிவிட்டது. வீடுகளை விட்டு வெளியே செல்ல எங்களை அனுமதிக்கவில்லை. நாங்கள் அச்சத்தில் உள்ளோம். காஷ்மீரில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதால், எங்களை ஜம்மு செல்ல அனுமதிக்க வேண்டும்” எனக் கோரி வருகின்றனர்.