'உங்கள் பிரச்சினை உலகின் பிரச்சினை' மனநிலையில் இருந்து வெளியேறுங்கள் – ஐரோப்பிய நாடுகளுக்கு ஜெய்சங்கர் அறிவுரை

பிரஸ்லாவா,

ஐரோப்பிய நாடான ஸ்லொவாகியா தலைநகர் பிரஸ்லாவாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் உக்ரைன் – ரஷியா இடையேயான போர், ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.

அந்த கேள்விகளுக்கு பதில் அளித்த இந்திய வெளியுறவுத்துறை மந்திரி, உக்ரைன் – ரஷியா விவகாரத்தில் இந்தியா வேலி மேல் (நிலைப்பாட்டை எடுக்காமல்) அமர்ந்திருக்கவில்லை. நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் தெளிவாகவும் உறுதியாகவும் அமர்ந்துள்ளோம்’ என்றார்.

உலக சக்தி சக்கரத்தில் இந்தியா எந்த பக்கத்தில் சாயும் அமெரிக்காவிடமா? சீனாவிடமா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், இது போன்ற கட்டமைப்பை இந்தியா மீது திணிக்க நீங்கள் முயற்சிக்கிறீர்கள். இந்தியா எந்த பக்கத்திலும் சாயும் தேவையில்லை என நான் நினைக்கிறேன். இந்தியா அதன் நலன் மற்றும் மதிப்புகளுக்கு ஏற்ப சொந்தமாக முடிவெடுத்துக்கொள்ளும்’ என்றார்.

உக்ரைன் போரின் போது இந்தியா எடுத்துள்ள நிலைப்பாடு இந்தியா – சீனா இடையே எல்லைப்பிரச்சினை ஏற்பட்டால் உலக நாடுகளின் ஆதரவில் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், ஐரோப்பிய நாடுகள் தங்கள் பிரச்சினைகள் உலகின் பிரச்சினைகள் மற்றும் உலகின் பிரச்சினைகள் தங்கள் பிரச்சினைகள் அல்ல’ என்ற மனநிலையில் இருந்து ஐரோப்பிய நாடுகள் வெளியே வர வேண்டும். நாங்கள் (இந்தியா) சீனாவுடன் கடினமான உறவை கொண்டுள்ளோம். அதை சரிவர கையாள எங்களுக்கு திறமை உள்ளது. உக்ரைன் – ரஷியா இடையேயான போருக்கு முன்பு இருந்தே எங்களுக்கும் சீனாவுக்கும் பிரச்சினை நிலவி வருகிறது. அதற்கும் தற்போதைய உக்ரைன் – ரஷியா போருக்கும் தொடர்பு இல்லை.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.