காஷ்மீரில் தொடரும் பதற்றம்: 177 பண்டிட் ஆசிரியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

ஸ்ரீநகரில் பணியமர்த்தப்பட்ட 177 பண்டிட் ஆசிரியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த பல ஆண்டுகளாக பண்டிட் சமூகத்தினரை மீள்குடியேற்றம்  செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீரில் பண்டிட் சமூகத்தினர் 6,000 பேர் அரசுப் பணியில் அமர்த்தப்பட்டனர். இதற்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது பண்டிட்டுகளை குறிவைத்து அடுத்தடுத்து படுகொலைகளை நிகழ்த்தி வருகின்றனர். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தவர் அல்லாத பொதுமக்களையும் பயங்கரவாதிகள் குறிவைத்து படுகொலை செய்துள்ளனர். கடந்த சில வாரங்களாக படுகொலை சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்கின்றன.

இதனையடுத்து காஷ்மீர் வாழ் பண்டிட்டுகள் பலர் காஷ்மீரில் இருந்து வெளியேறவும் தொடங்கியுள்ளனர். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் பண்டிட்டுகள் இடம்பெயர்ந்து வருகின்றனர். முன்னதாக, 1990களில் காஷ்மீர் பண்டிட்டுகள் பெருமளவில் காஷ்மீரை விட்டு வெளியேறினர். காஷ்மீரில் தொடர்ந்து பண்டிட்டுகள் மற்றும் அரசு ஊழியர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டதையடுத்து, உள்ளூர் அல்லாத அரசு ஊழியர்கள் பலர் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் நாங்கள் திரும்பி வந்து எங்கள் பணிகளைத் தொடரப் போவதில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
image
காஷ்மீரில் நிலவிவரும் இந்த அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் ஸ்ரீநகரில் பணியமர்த்தப்பட்ட 177 பண்டிட் ஆசிரியர்களை பாதுகாப்பான இடங்களுக்கு ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் இடமாற்றம் செய்துள்ளது.

இதற்கு மத்தியில் பண்டிட்டுகள் வாழும் முகாம்கள் உள்ள பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தங்களை வலுகட்டாயமாக காஷ்மீரில் தங்கவைக்க அரசு முயற்சிப்பதாக பண்டிட்டுகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதையும் படிக்கலாம்: சித்து மூஸ் வாலாவின் உடலை துளைத்த 19 குண்டுகள் – பிரேத பரிசோதனையில் பகீர் தகவல்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.