புதுடெல்லி: மாநிலங்களவை எம்பி பதவி கிடைக்காத அதிருப்தியில் நடிகை நக்மா பாஜகவில் சேர போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் பெயர் பட்டியல் கடந்த 29ம் தேதி வௌியிடப்பட்டது. இந்த முறை மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நடிகையுமான நக்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று நினைத்திருந்தார். ஆனால், அவரது பெயரை காங்கிரஸ் தலைமை அறிவிக்கவில்லை. இந்நிலையில் அதிர்ச்சியடைந்த நக்மா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘காங்கிரஸ் கட்சியில் இணைந்த போது கடந்த 2003-04ம் ஆண்டில் மாநிலங்களவை வாய்ப்பு தரப்படும் என சோனியாகாந்தி உறுதி அளித்திருந்தார். கட்சியில் இணைந்து 18 ஆண்டுகள் ஆகியும் எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஏன், மாநிலங்களவை எம்பியாவதற்கு எனக்கு தகுதி இல்லையா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். காங்கிரஸ் கட்சிக்கு பகிரங்கமாக கருத்துகளையும் அதில் தெரிவித்து இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி நடிகை நக்மாவை கண்டுகொள்ளவில்லை. இதனால், நக்மா கடும் அதிர்ச்சியடைந்தார். இத்தனை வருஷம் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்து என்ன பிரயோசனம் என்ற மனநிலைக்கு தற்போது அவர் ஆளாகியுள்ளனர். இது ஒரு புறம் இருக்க வேறு ஏதாவது ஒரு கட்சிக்கு போகலாமா? என்று நடிகை நக்மா இருந்து வருகிறார். ஒரு வேளை அவர் பாஜகவில் சேருவாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த போது 9 மொழி படங்களில் நான் பிசியாக நடித்து கொண்டு இருந்தேன். 2004ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது எனக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியாகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த பதவியை ஏற்றுக்கொண்டால் சினிமாவில் நடிப்பது பாதிக்கப்படும். அதனால் அதை வேண்டாம் என சொல்லி விட்டேன். சரி எப்படியும் நம் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தேன். கொஞ்ச நாளில் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியல்வாதியாக மாறினேன். கட்சிக்காக கடுமையாக உழைத்தேன். அனைத்து மாநிலங்களுக்கும் சென்று தேர்தல் பிரசாரம் செய்தேன். மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக 7 ஆண்டுகள் பணியாற்றினேன். அப்போது பெண்களுக்காக போராட்டம் எல்லாம் நடத்தி இருக்கிறேன். பெண்களின் பிரச்னைகளை வெளியில் கொண்டு வந்து இருக்கிறேன். களத்தில் இறங்கி கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டு இருக்கிறேன். இதற்கு மேல் எனக்கு என்ன தகுதி வேண்டும். அதனால் தான் நான் எனது மனக்குமுறலை தெரிவித்தேன். இது பற்றி கட்சி மேலிடத்திலும் எனது விளக்கத்தை தெரிவித்து விட்டேன். எனது உழைப்பை பார்த்தும், எனக்கு பொது மக்களிடம் இருக்கும் செல்வாக்கை பார்த்தும் பல்வேறு கட்சிகளிடம் இருந்து அழைப்பு வருகிறது. பாஜகவில் இருந்து தான் அதிகமான அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. மற்ற கட்சிகளில் சேரும் எண்ணம் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.