புதுச்சேரி:
புதுவை அரசும், பிரெஞ்சு அரசும் இணைந்து தொழில் முனைவோர் மாநாட்டை அண்ணாசாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடத்தியது.
இன்று 2-வது நாளாக மாநாடு நடந்தது. மாநாட்டில் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த 28 நிறுவனங்களும், 58 பிரெஞ்சு இந்திய கூட்டு நிறுவனங்களும் என மொத்தம் 86 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாநாட்டில் புதுவையில் தொழில் தொடங்குவதற்கான சூழல், கட்டமைப்புகள், அரசின் சலுகைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநாடு குறித்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி பெஸ்ட் புதுவையை உருவாக்குவோம் என வாக்குறுதியளித்துள்ளார். கடந்தமாதம் புதுவைக்கு வந்த உள்துறை மந்திரி அமித்ஷாவும் பெஸ்ட் புதுவையை உருவாக்க உறுதியளித்துள்ளார். தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த அரசு புதுவையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதற்காக ஒற்றைச்சாளர முறையில் தொழில் தொடங்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசு எளிமையாக தொழில் தொடங்க ஒரு சட்டம் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்தை புதுவையிலும் அமல்படுத்த உள்ளோம்.
மாநாட்டில் பங்கேற்ற நிறுவனத்தினர் புதுவையில் தொழில் தொடங்க மிகுந்த ஆர்வத்தோடு உள்ளனர். தொழில் தொடங்க தேவையான நிலம், மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றை அரசு செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக தெரிவித்துள்ளோம். புதிய தொழிற்சாலைகள் வந்தால் புதுவை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
புதுவையின் பொருளாதாரம் மேம்படும். சேதராப்பட்டில் கையகப்படுத்தி உள்ள 750 ஏக்கரில் தொழிற்சாலைகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம். இதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும். தகவல் தொழில்நுட்பம், மருந்துகள் தயாரிப்பு, மின்சாதனம், ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறோம்.
இதில் பங்கேற்ற 10 நிறுவனங்கள் உடனடியாக தொழில் தொடங்க தயாராக உள்ளனர். இந்த மாநாட்டின் மூலம் ரூ.ஆயிரம் கோடி முதலீடு புதுவைக்கு வரும். 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகளை கொண்டுவர முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது தொழில்துறை செயலர் அருண் உடனிருந்தார்.