புதுடெல்லி: கரோனா விதிமுறைகளை பின்பற்றாத பயணிகளை விமானத்திலிருந்து வெளியேற்றலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஹரி ஷங்கர் அண்மையில் விமான பயணம் மேற்கொண்ட பொழுது விமானங்களில் கரோனா விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாதது குறித்து எழுப்பிய புகார் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு நேற்று டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) விபின் சாங்கி மற்றும் நீதிபதி சச்சின் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கரோனா தொற்று இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில் விமானங்கள் போன்ற முழுவதும் மூடப்பட்ட இடங்கள் அல்லது அமைப்புகளில் கரோனா விதிமுறைகளை முழுமையாக பின்பற்றுவது என்பது அவசியமாகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
எனவே இத்தகைய விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை சிவில் விமானப் போக்குவரத்துக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) உறுதி செய்ய வேண்டும் என்றும், இது சம்பந்தமாக விமான நிலைய ஊழியர்கள் மற்றும் விமான நிறுவன ஊழியர்களுக்கு உரிய தகவல்களை வழங்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் விதிமுறைகளை பின்பற்றாத பயணிகளை விமானத்தில் இருந்தும் விமான நிலையத்தில் இருந்தும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் கரோனா விதிமுறைகளை பின்பற்றாத சம்பந்தப்பட்ட பயணியின் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்றும், ‘நோ ஃப்ளை லிஸ்ட்’ எனப்படும் விமான பயணம் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்ட நபர்கள் பட்டியலில் சேர்க்கலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து டிஜிசிஏ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது, “விமானப் பயணிகள் உணவு சாப்பிடும்போது மட்டுமே தங்களது முகக்கவசங்களை அகற்றுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. அதை அவர்கள் முறையாக பின்பற்றி வருகின்றனர்” என்றார்.
இதையடுத்து பொறுப்பு தலைமை நீதிபதி விபின் சாங்கி கூறும்போது, “உணவு சாப்பிடும்போதோ, தண்ணீர் குடிக்கும் போதோ முகக்கவசங்களை அகற்றிக் கொள்ளலாம். ஆனால் விமானத்தில் பயணிக்கும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற விதிமுறை ஏற்கெனவே அமலில் உள்ளது. அதை கண்டிப்பாக பின்பற்றவேண்டும்” என்றார்.