புதுடெல்லி: பாலியல் வன்கொடுமை செய்வதை பகடியாக்கி, அதை இளைஞர்களை பேசவைத்து, நடிக்கவைத்து எடுக்கப்பட்ட வாசனை திரவிய விளம்பரம் துர்நாற்றம் மிகுந்ததாக இருப்பதாக மக்கள் எதிர்ப்புக் குரல்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்தியாவில் ஒரு நாளில் சராசரியாக 88 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்கின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின் புள்ளிவிவரம் இது. அண்மையில் ஹைதராபாத்தில் பள்ளிச் சிறுமி கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவங்கள் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்முறைகளை தாண்டி கூட்டு பாலியல் வன்முறைகள் தற்போது அதிகமாக நடைபெறுகிறது.
இந்தச் சூழலில் கூட்டுப் பாலியல் வன்கொடுமையை ஊக்குவிப்பது போல் ஒரு விளம்பரம் வெளியாகியுள்ளது.
ஒரு வாசனை திரவிய விளம்பரம் அது. வீட்டின் படுக்கை அறை, சூப்பர் மார்க்கெட் என இரு வேறு இடங்களில் எடுக்கப்பட்ட விளம்பரங்கள் உள்ளன. இரண்டிலுமே ஒரு பெண், 4 ஆண்கள் இருக்கின்றனர். அனைவருமே 20 வயதுகளில் இருக்கும் இளைஞர்கள்.
சூப்பர் மார்கெட் விளம்பரத்தில் ஒரு பெண் ட்ராலியுடன் செல்ல, பின்னால் நிற்கும் நால்வரில் ஒருவர் “நாம 4 பேரு. இருக்கிறது ஒண்ணு… யாருக்கு …..” என்று இரட்டை அர்த்தத்துடன் கேட்க, அந்தப் பெண் திகைத்துப் போய் திரும்புகிறார். அவ்வாறு திரும்பிப் பார்க்கையில் அந்த ஆண்கள் நால்வரும் ஒரு வாசனை திரவியத்தைப் பற்றியே பேசியுள்ளனர் எனத் தெரிந்து ஆசுவாசம் அடைகிறார்.
வீட்டின் படுக்கை அறையில் எடுக்கப்பட்ட மற்றொரு விளம்பரக் காட்சியில் பெண்ணும், பையனும் அருகருகே அமர்ந்திருக்க திடீரென கதவைத் திறக்கும் 4 பேர் எங்களுக்கும் ……. வேண்டும் என்று கேட்க மீண்டும் திகைக்கிறார் அந்தப் பெண். ஆனால், அந்த நபரோ மேஜை மேல் உள்ள பெர்ஃப்யூமை எடுத்துக் கொள்கிறார். அப்போதுதான் அவர்கள் பெர்ஃபியூமைப் பற்றித்தான் பேசினார்கள் எனப் பெண் புரிந்து கொள்கிறார்.
இந்த விளம்பரத்துக்கு மக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்த விளம்பரம் குறித்து ஏஎஸ்ஐசி (ASCI) எனப்படும் அட்வர்டைஸிங் ஸ்டாண்டர்ட் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு புகார் செல்ல, அவர்கள் சம்பந்தப்பட்ட விளம்பரத்தை உடனே திரும்பப்பெறுமாறு, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ஆண்களின் உள்ளாடை தொடங்கி, சோப்பு, டை, ஷேவிங் க்ரீம், ஆஃப்டர் ஷேர் லோஷன், ஏன் அவர்கள் பயன்படுத்தும் பைக் வரை அனைத்திற்கும் போகப்பொருளாக பெண்ணை பயன்படுத்தும் போக்கு இன்னும் ஒழியவில்லை. அதுவும் இந்த விளம்பரம் அபத்தத்தின் உச்சம்.
இது தொடர்பாக ஏஎஸ்சிஐ (ASCI) பதிவு செய்துள்ள ட்வீட்டில், “எங்களுக்கு சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இந்த விளம்பரம் எங்கள் விதிமுறைகளை தீர்க்கமாக மீறியுள்ளது. பொதுநலனுக்கு எதிராக உள்ளது. நாங்கள் அட்வர்டைஸருக்கு எச்சரிக்கை விடுத்து உடனடியாக விளம்பரத்தை நீக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளோம். விசாரணை நடைபெறும்” என்று தெரிவித்துள்ளது.
Thank you for tagging us. The ad is in serious breach of the ASCI Code and is against public interest. We have taken immediate action and notified the advertiser to suspend the ad, pending investigation.
— ASCI (@ascionline) June 3, 2022