யார் எதிர்க்கட்சி? அ.தி.மு.க- பா.ஜ.க- பா.ம.க யுத்தம்

Who is main opposition in Tamilandu? Race between ADMK, BJP, PMK: பா.ம.க தலைமையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் மற்றும் பா.ஜ.க.,வின் சமீபத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவற்றுடன், தமிழகத்தில் யார் எதிர்க்கட்சி என்ற போட்டி, அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் பா.ம.க., ஆகிய கட்சிகளிடையே நிலவி வருகிறது.

தமிழகத்தில் தி.மு.க தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சி செய்து வருகிறது. கூடுதலாக அவர்களுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், வி.சி.க., ம.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பலமும் இருக்கிறது. அதேநேரம் தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க இருந்து வருகிறது. அதாவது, சட்டசபையில் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக அ.தி.மு.க இருந்து வருகிறது.

ஆனால், சமீபகாலமாக மாறி வரும் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் போட்டி காரணமாக தமிழகத்தில் எதிர்க்கட்சி இடத்தைப் பிடிக்க அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் பா.ம.க., ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவி வருகிறது.

ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க இருந்து வரும் நிலையில், பா.ஜ.க.,வும் பா.ம.க.,வும் எப்படி தங்களை தாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி என்று உரிமை கோருகின்றன. எதிர்க்கட்சி என்பது எண்ணிக்கை சார்ந்தது அல்ல, செயல்பாடு சார்ந்தது என பா.ஜ.க அரசுக்கு எதிரான அதன் சமீபத்திய போராட்டங்களைச் சுட்டிக்காட்டி வாதம் செய்கிறது. அதேநேரம் பா.ம.க தரப்பிலோ, என்ன தான் மத்தியில் ஆளும் கட்சியாக இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை பா.ஜ.க சிறிய கட்சிதான் என்று கூறுகிறது. மேலும், மக்கள் பிரச்சனைகளில் தங்கள் கட்சியின் செயல்பாடுகளையும் அதன் எதிர்க்கட்சி தகுதிக்கான காரணமாக சேர்க்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சி தான் உண்மையான எதிர்க்கட்சி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து வருகிறார். சேலத்தில் கட்சி நிர்வாகிகளுடனான சந்திப்பினைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், ​​”தேசிய அளவில் பாஜக பெரிய கட்சியாக இருக்கலாம், ஆனால் தமிழகத்தில் அது சிறு கட்சியாகவே உள்ளது. தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். அது உண்மை அல்ல. தமிழகத்தில் பாஜக இன்னும் சிறிய கட்சியாகவே உள்ளது” என்று கூறினார்.

அதேநேரம், பா.ஜ.க., தான் முதன்மை எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது என தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறினார்.

இதற்கிடையில், ”முக்கிய எதிர்க்கட்சி அ.தி.மு.க தான் என்ற தகுதியை யாரும் கேள்வி எழுப்ப முடியாது. அ.தி.மு.க.,வின் பலம் மற்றும் செயல்பாடு குறித்து தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்” என முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க., தான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என்ற வி.பி.துரைசாமியின் கருத்துக்கு எதிர்வினையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி, ”அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் மக்கள் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். எங்கள் செயல்பாட்டை சரிபார்க்க வி.பி. துரைசாமி தேவையில்லை” என்று கூறினார்.

வருமான வரித்துறை மற்றும் அமலாக்க இயக்குனரகத்தின் நடவடிக்கைக்கு பயந்து அ.தி.மு.க அடக்கி வாசிக்கிறது என்ற பா.ஜ.க.,வின் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “எங்களை யாரும் தொட துணிய முடியாது” என்று எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார்.

அதேநேரம், பா.ஜ.க., தான் முதன்மை எதிர்க்கட்சி என்ற அக்கட்சி தலைவர்கள் கூறிய நிலையில், பா.ஜ.க தலைமையிடம் அதற்கான தகுதியை பா.ம.க கேள்வி எழுப்பியுள்ளது. மேகதாதுவில் அணை கட்ட பா.ஜ.க ஆளுகின்ற கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவிப்பாரா என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில், பாமக மாபெரும் போராட்டத்தை நடத்தியதாகவும், ஒரு எதிர்க்கட்சி அப்படித்தான் செயல்பட வேண்டும், என்றும் அன்புமணி கூறியுள்ளார்.

சட்டசபையில் அதன் பலத்தை பொறுத்தவரை அதிமுக, மறுக்கமுடியாத முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. ஆனால், எதிர்க்கட்சி இடத்தைப் பெறுவதற்கான உரிமைகோரலுக்குப் பின்னால் உள்ள பா.ஜ.க.,வின் தர்க்கம் என்னவென்றால், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற எண்ணிக்கை முக்கியமல்ல. செயல்பாடு தான் முக்கியம் என கூறுகிறது. ”தி.மு.க அமைச்சர்களின் ஊழலை பாஜக அம்பலப்படுத்தி வருகிறது, தமிழக அரசை எரிபொருள் விலையைக் குறைக்கக் கோரி மாபெரும் போராட்டங்களை நடத்தியது, தருமபுர ஆதீன ‘பட்டின பிரவேசத்திற்கு’ தடை போன்ற பிரச்சனைகளுக்காகப் போராடியது போன்ற ஆளும் கட்சியின் தவறுகளை அம்பலப்படுத்தியது பா.ஜ.க தான்” என்று வி.பி.துரைசாமி கூறினார்.

இதையும் படியுங்கள்: ஜி ஸ்கொயர் வழக்கு எஃப்.ஐ.ஆர் மாற்றம்: விகடன், சவுக்கு, மாரிதாஸ் விடுவிப்பு!

எதிர்க்கட்சி இடத்தை பிடிக்க முயலும் பா.ஜ.க.,விடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அதிமுக அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன் தனது கட்சியினரை எச்சரித்த பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

அதேநேரம் மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து போராடி வருவதாக பா.ஜ.க கூறிவருவதை பா.ம.க. கேள்விக்குள்ளாகியுள்ளது. மக்கள் பிரச்சனைக்காக பாஜக எந்த போராட்டத்தையும் நடத்தவில்லை. கட்டாய மத மாற்றங்களுக்கு எதிரான போராட்டம் அல்லது ‘பட்டின பிரவேசம்’ மீதான தடைக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பா.ஜ.க.,வின் அனைத்து எதிர்ப்புகளும் மத உணர்வுகளைத் தூண்டுவதாகும். எரிபொருள் விலையை குறைக்கக் கோரி பா.ஜ.க நடத்திய போராட்டம், விலை உயர்வைக் குறைக்கும் கடமை, மத்திய அரசின் கடமை என்பதை திசை திருப்பவே,” என்று பா.ம.க தரப்பில் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.