மகாராஷ்டிர மாநிலத்தில், பொது இடங்களில், முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் ஆக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதை அடுத்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி, மேற்கண்ட மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில், பொது இடங்களில், முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் ஆக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி, திறந்தவெளி தவிர்த்து பிற பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக கூடுதல் முதன்மை செயலாளர் டாக்டர் பிரதீப் வியாஸ், அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கு கடிதம் வழியே பல உத்தரவுகளை வழங்கி உள்ளார். அதில், ரயில்கள், பேருந்துகள், திரையரங்குகள், ஆடிட்டோரியங்கள், அலுவலகங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட மூடப்பட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மும்பை, புனே, தானே மற்றும் பால்கர் போன்ற பகுதிகளில், கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் மூலம் நாட்டின் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொது இடங்களில், பொது மக்கள் முகக்கவசம் அணியும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகாராஷ்டிர மாநிலத்தில், நேற்று முன்தினம் 1,045 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில் நேற்று தொற்று பாதிப்பு 1,134 ஆக அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.