AIADMK leader’s attack on BJP reflects disquiet within as 2024 polls loom, under ally’s shadow: சமீபத்தில் அ.தி.மு.க.,வின் மூத்த தலைவர் சி.பொன்னையன், கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.,வுக்கு எதிராக தொடுத்த கூர்மையான, எதிர்பாராத தாக்குதல், டெல்லியை மையமாகக் கொண்ட பா.ஜ.க.,வுடனான அ.தி.மு.க.,வின் உறவுகளால் தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க கட்சியின் அணிகளுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தைப் வெளிப்படுத்துகிறது. தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொண்டுள்ள நிலையில், கூட்டணிக்குள் முதன்மைக் கட்சியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற குரல்கள் அ.தி.மு.க.விற்குள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தமிழகத்திற்கும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தில் இருந்து தி.மு.க ஆதாயமடைந்து வருகின்ற நிலையில், அ.தி.மு.க தனது இருப்பை தக்கவைத்துக்கொள்வது அவசியமாக உள்ளதாக அக்கட்சிக்குள் குரல்கள் எழுகின்றன.
அ.தி.மு.க.,வின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க மீது பா.ஜ.க செல்வாக்கு செலுத்தி வருகிறது. ஜெயலலிதாவின் அந்தஸ்து அவரை எந்த கூட்டணியிலும் ஆதிக்கம் செலுத்தும் தலைவராக மாற்றியிருந்த நிலையில், பலவீனமான மற்றும் பிளவுபட்ட அ.தி.மு.க.,வின் மீது சவாரி செய்வதில் அவர் இல்லாததை பாஜக பயன்படுத்திக் கொண்டது.
செவ்வாயன்று, கட்சி தொண்டர்களிடம் பேசும்போதும், பின்னர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசும்போதும், அ.தி.மு.க மூத்த தலைவரும் கட்சியின் அமைப்புச் செயலாளருமான பொன்னையன், பாஜக தலைமையிலான மத்திய அரசு மாநிலத்தின் வருவாயை “திருடுகிறது” என்றும், “தமிழர்களுக்கு எதிரான” கொள்கைகளை பா.ஜ.க கொண்டுள்ளதாகவும், அ.தி.மு.க.,வின் தேர்தல் தோல்விகளுக்கும் சிறுபான்மை வாக்காளர்கள் கட்சியிலிருந்து விலகியதற்கும் இதுவே காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும், கட்சியின் மற்ற தலைவர்களும் உணர்ந்ததை மட்டுமே தான் வெளிப்படுத்துவதாகவும், 2024 தேர்தலுக்கு தொண்டர்களை தயார்படுத்த இன்னும் நேரம் இருந்தாலும், அ.தி.மு.க தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பொன்னையன் கூறினார். “தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகளின் கூட்டங்கள் நடந்து வருகின்றன. அடிமட்ட தொண்டர்களின் கருத்துக்களை கேட்டு வருகிறோம், ”என்று பொன்னையன் கூறினார்.
அதேநேரம், இதற்கு பா.ஜ.க.,வுடனான உறவை அ.தி.மு.க துண்டிக்கும் என்று அர்த்தமா என்று கேட்டதற்கு, சரியான நேரத்தில் முடிவு செய்வோம் என்றார் பொன்னையன்.
பல அதிமுக தலைவர்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், பொன்னையனின் அறிக்கைகள் “இருத்தலுக்கான நெருக்கடியை” சமாளிப்பதற்கான கட்சியின் முறையான முடிவை வெளிப்படுத்துவதாக தெரிவித்தனர். கட்சி கூட்டங்களில், பா.ஜ.க “எங்கள் தோளில் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில்”, அ.தி.மு.க “உறங்கிவிட்டதாக” அ.தி.மு.க மேலிடத்தை தலைவர்கள் வசைபாடினர்.
பா.ஜ.க.,வுடனான உறவுகளைத் தவிர, அ.தி.மு.க தலைமையின் “அலட்சியம்” மற்றும் “புறக்கணிப்பு” காரணமாக முதன்மை எதிர்க்கட்சியாக தனது பங்கை ஆற்றுவதில் அக்கட்சி தவறி வருவதாக தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது என்றும் அந்த தலைவர்கள் தெரிவித்தனர். ஒப்பீட்டளவில் தமிழக பா.ஜ.க.,வின் புதிய தலைவர் கே.அண்ணாமலை, அ.தி.மு.க தலைவர்களைப் போலல்லாமல், தமிழகப் பிரச்சனைகளில் அதிகத் தெரிவுநிலை காரணமாக, எப்படி முதன்மை எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளார் என்பதை பலர் சுட்டிக்காட்டினர். “கட்சி மேலிடம் செயலற்றதாகவும், அரைகுறையாகவும் இருப்பதால், பல தொண்டர்கள் தி.மு.க.,வில் இணைய கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள்,” என்று ஒரு தலைவர் கூறினார், இது “அ.தி.மு.க.,வின் மெதுவான மரணம்” என்றும் அவர் கூறினார்.
கர்நாடக கேடரின் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான 38 வயதான அண்ணாமலை, மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷால் அரசியலுக்கும் பா.ஜ.க.,வுக்கும் கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது. அண்ணாமலையின் சில அறிக்கைகள் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாகப் பார்க்கப்பட்டாலும், அவை தலைப்பு செய்திகளில் இடம்பெறுவதால், பா.ஜ.க அதை பொருட்படுத்தவில்லை.
முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறுகையில், இக்கட்டான காலங்களில் அ.தி.மு.க.வுடன் நின்ற தொண்டர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் பலர், பா.ஜ.க.விடம் அ.தி.மு.க முழுமையாக சரணடைந்துள்ளதாகவும், தலைமை செயலிழந்து விட்டதாகவும் கருதுகின்றனர்.
இருப்பினும், ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அ.தி.மு.க.,வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வி.கே.சசிகலாவுடனான மோதலில் பழனிசாமிக்கு பக்கபலமாக இருந்த மற்றொரு முன்னாள் அமைச்சர், பொன்னையனின் அறிக்கை பா.ஜ.க.,வுடனான உறவை முறித்துக் கொள்வதற்கான முன்னோட்டமாகவோ அல்லது டெல்லிக்கான சமிக்ஞையாகவோ பார்ப்பது தவறானது என்றார். “டெல்லிக்கு எதிராகச் சென்றால் கடுமையான விளைவுகள் ஏற்படும்” என்ற அச்சத்தின் காரணமாக, எந்தத் தலைவராலும் அதைச் செய்ய முடியாது” என்றும் அவர் கூறினார்.
“பொன்னையனின் அறிக்கையின் நோக்கம், தலைமை இன்னும் செயலில் உள்ளது என்பதை எங்கள் தொண்டர்களுக்கு நினைவூட்டுவதாகும்,” என்றும் அவர் கூறினார்.
பொன்னையன் தன்னிச்சையாக செயல்பட்டிருக்க மாட்டார் என்று அ.தி.மு.க மூத்த தலைவர் ஒருவர் கூறினார். “அவரது அறிக்கை சரியாக திட்டமிடப்பட்டதாக இல்லாவிட்டாலும், பா.ஜ.க.,விற்கு எதிரான தாக்குதலுக்கு செல்ல கட்சியால் அவருக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளது,” என்று அந்த தலைவர் கூறினார். அ.தி.மு.க.வுக்குள், கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு பொன்னையனுக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது.
இதையும் படியுங்கள்: யார் எதிர்க்கட்சி? அ.தி.மு.க- பா.ஜ.க- பா.ம.க யுத்தம்
அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட சிரமத்தை மற்றொரு தலைவர் ஒப்புக்கொண்டார். லோக்சபா மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் ஒன்றாகப் போட்டியிட்ட பிறகு, சமீபத்திய உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிடாவிட்டாலும், பெரிய பேரம் பேசும் சக்தி தங்களுக்கு இல்லை என்று ஒரு தலைவர் கூறுகிறார். “நாங்கள் பாஜக மாநில தலைவர்களுடன் இடங்களின் எண்ணிக்கை போன்றவற்றில் பேரம் பேசலாம், ஆனால் டெல்லியிடம் அல்ல” என்று அந்த தலைவர் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் பா.ஜ.க இப்போது மூன்றாவது பெரிய கட்சியாக இருப்பதாக உள்ளூர் கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன என்று அண்ணாமலை கூறி வருகிறார்.
அண்ணாமலையிடம் கருத்து பெற இயலவில்லை, ஆனால் அவருடன் பணிபுரியும் மூத்த தலைவர் ஒருவர் தமிழகத்தில் பா.ஜ.க இழப்பதற்கு எதுவும் இல்லை என்று சுட்டிக்காட்டினார். “இது தமிழக மக்களுக்கு கட்சியை அறிமுகம் செய்வதாகும். முந்தைய தலைவர்களுடன் ஒப்பிடும்போது அண்ணாமலை அதில் வெற்றி பெற்றுள்ளார்” என்று அந்த தலைவர் கூறினார்.