இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் சம்பியன்ஸ் லீக் தொடர் நேற்று (03) ஆரம்பமானது என இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது.
சம்பியன்ஸ் லீக் உதைப்பந்தாட்ட தொடர் கடந்த மூன்று வருடங்களாக இலங்கையில் இடம்பெறவில்லை. இந்நிலையில் 3 வருட இடைவெளியின் பின்னர் இந்த தொடர் நேற்று (3) ஆரம்பமானது.
இந்த போட்டி தொடர் கடந்த மே மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தது. எனினும், நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக போட்டிகள் பிற்போடப்பட்டன.
இந்நிலையில் இன்று (4) இடம்பெறும் ஒரு போட்டியில் ஜாவா லேன் அணியும், இலங்கை பொலிஸ் அணியும் சுகததாஸ அரங்கில் மோதும். இதேவேளை, பெலிகன்ஸ் மற்றும் சுபர் சன் அணிகளுக்கு இடையிலான போட்டி மாலிகாபிடியில் இடம்பெறும்.
நாளை (5) மாலிகாபிடியவில் இடம்பெறும் போட்டியில் மாவனல்லை செரண்டிப் அணியும், யாழ்ப்பாணம் சென் மேரிஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தும். அதேவேளை, குறித்த தினத்தில் சொலிட் மற்றும் சோண்டர்ஸ் அணிகள் சுகததாஸ அரங்கில் மோதும்.
லீக் முறையில் இடம்பெறும் இந்த தொடரில் பங்கு கொள்ளும் அனைத்து அணிகளும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.
எனவே, 14 அணிகளுக்கும் தலா 13 போட்டிகள் உள்ளன. தொடரின் முதல் வாரத்திற்கான போட்டி அட்டவணை மாத்திரமே தற்போது வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.