எந்தப் பாதுகாப்பம் இன்றி தண்ணீருக்காக கிணற்றுக்குள் பெண்கள் இறங்கி ஏறும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மத்தியப்பிரதேச மாநிலம் குசியா கிராமத்தில் கோடைக்காலத்தில் குளங்கள் மற்றும் கிணறுகளில் உள்ள நீர் வற்றிப்போனதால் கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. அங்கு வசிக்கும் பெண்கள் தண்ணீருக்காக தங்கள் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் வற்றிப்போன கிணற்றின் அடியில் இருக்கும் சிறிதளவு நீரை எடுக்க கிணற்றின் சுவரைப் பிடித்து, கீழே இறங்கி, தண்ணீரை எடுத்துக்கொண்டு மீண்டும் மேலே ஏறி வருகின்றனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. எந்தவிதமான பாதுகாப்பு நடவடிக்கையும் இன்றி தண்ணீருக்காக இந்தப் பெண்கள் கிணற்றில் இறங்கி ஏறும் வீடியோ பார்ப்பவர்களைப் பதைபதைக்க வைக்கிறது.
இந்தியாவில் உள்ள பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 2019 ஆம் ஆண்டு குளோபல் ஆய்வின்படி, தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் உள்ள 17 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட், ஹரியானா போன்ற மாநிலங்கள் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
அங்கு வாழும் மக்கள் தண்ணீருக்காக தங்கள் உயிரை பணயம் வைக்கின்றனர். இதுபோன்று வீடியோ வெளிவருவது இது முதல் முறையல்ல, ஏப்ரல் மாதத்தில் மகாராஷ்டிராவில் இதேபோல் தண்ணீரை எடுக்க பெண்கள் கிணற்றுக்குள் சென்ற வீடியோ பரபரப்பாகப் பேசப்பட்டது.
மத்தியப் பிரதேச மாநில அரசு 2024 ஆம் ஆண்டுக்குள் குழாய் நீர் வசதியை ஏற்படுத்தித் தருவதாக உத்தரவாதம் அளித்திருந்த நிலையில், இன்னும் இப்பகுதி மக்கள் தண்ணீர்ப் பஞ்சத்தால் அவதிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே, வரும் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்து, போராட உள்ளதாக இந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.