Trichy Thiruverumbur police station meets many problems and seeks high command action: தமிழக முதல்வர் இன்று சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து டிஜிபி மற்றும் உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மத்தியில் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், காவல்துறையில் பணியாற்றும் சராசரி காவலர்களின் பிரச்சினைகளை யாரும் காது கொடுத்து கேட்பதில்லை என காவல்துறையில் பலர் புலம்புகின்றனர்.
காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகளின் சுய தேவைகளுக்கு காவல் நிலையங்களில் பணியாற்றக்கூடிய பெரும்பாலான போலீசார் சென்று விடுவதால் காவல் நிலையத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட போலீசாரை பயன்படுத்த முடியாமல் பறிதவிப்பதாக காவல் நிலையத்தில் இருக்கும் கீழ் மட்ட அதிகாரிகள் புலம்புகின்றனர்.
இது குறித்த விபரம் வருமாறு: திருச்சி மாவட்டத்தில் காவல்துறை மாநகரம் மற்றும் புறநகர் என்று இரண்டாக பிரித்து நிர்வகிக்கப்படுகிறது. மாநகரத்திற்கு கார்த்திகேயன் காவல்துறை ஆணையராகவும், புறநகர் காவல் மாவட்டத்திற்கு சுஜித்குமார் எஸ்பியாகவும் இருந்து வருகிறார்கள்.
மாநகர காவல் துறையில் போக்குவரத்து பிரிவு, குற்றப்பிரிவு, சட்டம் ஒழுங்கு பிரிவு என்று ஒவ்வொரு பிரிவுக்கும் தனித் தனி காவல்நிலையங்கள் நிர்வகிக்கப்படுகிறது. ஆனால் புறநகர் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து ஆகிய வழக்குகள் ஒரே காவல் நிலையத்தில் நிர்வாகம் செய்யப்படுகிறது. புறநகர் காவல் நிலையங்களுக்கு எல்லைகள் அதிகமாகவே இருக்கும் நிலையில், காவலர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
திருச்சி புறநகர் காவல் நிலையங்களில் திருவெறும்பூர் காவல் நிலையம் பிரசித்தி பெற்றது. கள்ள சாராயம், கஞ்சா, குட்கா விற்பனை, ஆள் கடத்தல், குழந்தை கடத்தல், போதைப்பொருள் கடத்தல், தினமும் சாலை விபத்துக்கள், வழிப்பறி, தாலிச் செயின் பறிப்பு, வீட்டு பூட்டை உடைத்து திருட்டு இப்படி சட்ட விரோதமாக நடைபெறும் அனைத்து குற்றங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய தலைமை காவல் நிலையமாக திருவெறும்பூர் காவல் நிலையம் இருந்து வருகின்றது.
கடந்த காலங்களில் திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைகுட்பட்ட பகுதியில் நடந்து வரும் பல்வேறு சம்பவங்கள் குறித்து வழக்குகள் பதியப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது. இங்கு பணிபுரியும் காவல் அதிகாரி மற்றும் காவலர்களின் தரத்தைப் பொறுத்தே குற்றங்கள் கூடுவதும், குறைவதும் மாமூலானது.
சமீப காலமாக இப்பகுதிகளில் கஞ்சா, குட்கா, கள்ள லாட்டரி என சட்டவிரோத காரியங்கள் தினமும் அதிகரித்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்த திருவெறும்பூர் காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத ஒரு காவலர் புலம்புகையில்: இப்பகுதியில் நீண்ட காலமாக பணி செய்யும் உளவுப்பிரிவு போலீசார் தவறான தகவல்களை மேலிட அதிகாரிகளுக்கு தருவதாலும், சில தகவல்களை குற்றவாளிகளுக்கு கசிய விடுவதாலும் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி இங்கு அனுமதிக்கப்பட்ட போலீஸ் எண்ணிக்கை 81 ஆனால் வருகை 70 பேர், அதில் 30 பேர் வரை, புறநகர் காவல் துறை உயர் அதிகாரிகளின் தேவைகளுக்கு வைத்துக் கொள்கின்றனர். 14 பேர் விடுப்பில் போக மீதி 26 காவலர்கள் மட்டுமே காவல் நிலைய பணியில் இருக்க வேண்டிய துர்ப்பாக்கியமான நிலை.
இந்த சூழலில் தொகுதி அமைச்சர் விழா பந்தோபஸ்து மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் பல்வேறு பிரச்சனைகளுக்கு 26 காவலர்களை மட்டுமே வைத்துக் கொண்டு, மேற்கே 15 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள கீழக்குறிச்சி முதல் கிழக்கே கிளியூர் வரையிலும், வடக்கில் காவிரி ஆறு வரை பெரிய விரிந்த பகுதிகளில் வாழும் பொதுமக்களை பாதுகாப்பது எப்படி? அவர்கள் பிரச்சினையை நாங்கள் எப்படி தீர்க்க முடியும்? எங்கள் பிரச்சினையை நாங்கள் யாரிடம் சொல்லி தீர்த்துக் கொள்வது?
திருவெறும்பூர் காவல் நிலைய எல்லை, பொன்மலை காவல் நிலைய எல்லை, அரியமங்கலம் காவல் நிலைய எல்லை, தோகூர் காவல் நிலைய எல்லை என 15 முதல் 20 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள பகுதிகள் எங்களது காவல் நிலைய வரம்புக்குள் வருகின்றது.
இதையும் படியுங்கள்: பா.ஜ.க காக்கா கூட்டமா? செல்லூர் ராஜு- கரு. நாகராஜன் மோதல்
இதனால் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் இருந்து பிற காவல் நிலைய எல்லைக்கு அருகே உள்ள பகுதிகளில் நடைபெறக்கூடிய கொலை கொள்ளை வழக்குகளில் நாங்கள் செல்வதற்குள் குற்றவாளிகள் தப்பித்து செல்லும் நிலை இருக்கின்றது. பிற காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எங்களைப் போன்ற காவலர்கள் நமக்கு ஏண்டா வம்பு என்று கழன்றுக் கொள்கின்றனர். இதனால் எங்கள் எல்லைப்பகுதியை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
நாங்கள் புறநகர் காவலர்கள் என்பதால், மாநகர காவலர்கள் கொஞ்சம் எங்களை ஓரங்கட்டுவதும் வேதனையாகத்தான் இருக்கிறது.
இப்படி புறநகரில் இருக்கும் திருவெறும்பூர் காவல் நிலையம் போல் தமிழகத்தில் பெரும்பாலான காவல் நிலையங்கள் இருக்கின்றன. ஏற்கனவே காவல் துறையில் பற்றாக்குறையான காவலர்களை கொண்டு நாங்கள் பணியாற்றும் சூழலில், உயரதிகாரிகளின் கட்டளைக்கு அடிபணிந்து கொஞ்சம் அனுசரித்து நகரும்போது எங்களுக்கான மன உளைச்சல் உச்சத்தை தொடுகிறது என்று புலம்பினார்.
காவல்துறையில் எல்லை பிரச்சினையும், பற்றாக்குறை பிரச்சினையும் தொடர் கதையாகி இருப்பது பெருத்த வேதனைதான்.
க. சண்முகவடிவேல்