வயநாடு: கேரளாவில் பழங்குடி சமூக மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் முயற்சியாக முதல் பழங்குடியின பாரம்பரிய கிராமமான ‘என் ஊரு’ சனிக்கிழமை பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ள பூக்கோடு மலைச்சரிவில், 25 ஏக்கர் பரப்பளவில் ‘என் ஊரு’ என்ற முதல் பழங்குடியின பாரம்பரிய கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.
‘என் ஊரு’ அறக்கட்டளையின் தலைவரும் வயநாடு துணை ஆட்சியருமான ஸ்ரீ லக்ஷ்மி கூறும்போது, “விரிவான பழங்குடி சமூக மக்களின் மேம்பாட்டு திட்டம், பழங்குடிசமூக மக்களின் பாரம்பரிய அறிவு, பாரம்பரியம் ஆகியவற்றை வெளிக்கொண்டு வர ஒரு தளம் அமைத்துக் கொடுப்பது, பழங்குடி சமூக மக்களின் வாழ்வாதார விருப்பங்களை நிறைவேற்றுவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.
சுற்றுலாத் துறை மற்றும் பழங்குடிகள் வளர்ச்சித் துறையிம் இணைந்து ரூ.10 கோடி செலவில் இந்தத் திட்டத்தினை செயல்படுத்துகின்றன. கடந்த 2012ம் ஆண்டு அப்போதைய வயநாடு துணை ஆட்சியர் ரூ.3 கோடி செலவில் இந்தத் திட்டத்தினைத் தொடங்கி வைத்தார். ஆனாலும், தொழில்நுட்ப சிக்கல் காரணமாக 2016-ல் தான் பணிகள் தொடங்கப்பட்டன. அதன் பின்னர் மாவட்ட நிர்மிதி கேந்திராவிடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டு முதல் கட்ட பணிகள் 2018-ம் ஆண்டு நிறைவடைந்தன.
முதல்கட்ட பணிகளின் கீழ், பழங்குடியினர் சந்தை, பழங்குடியினர் உணவு விற்பனை நிலையம், வசதிகள் மையம், கிடங்கு ஆகியவை 2020-ம் ஆண்டு திட்டத்தில் கட்டிமுடிக்கப்பட்டன.
இங்கு 10 முன்மாதிரி குடிசைகள், மழைக்கு தங்குமிடம், கழிப்பறைகள், சிற்றுண்டி நிலையம், பழங்குடியினரின் கலாசாரம் மற்றும் கலைகளை எடுத்துரைக்கும் வகையில் அரங்கம், சிறுவர்கள் பூங்கா ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம், நேரடியாக 50 பேருக்கும், மறைமுகமாக, 1,000 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் லேசர் ஷோவும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இங்கு ரூ.2 கோடி செலவில், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு காங்கிரீட் சாலையும் லேட்ரைட் நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவினை ஒட்டி “மழ கழசா” என்கிற கண்காட்சி சனி, ஞாயிற்றுகிழமைகளில் நடைபெறுகிறது.