பா.ஜனதாவுக்கு கூடுவது காக்கா கூட்டம்- செல்லூர் ராஜூ கடும் தாக்கு

மதுரை:
முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான செல்லூர் ராஜூ இன்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க என்றும் தமிழக மக்களுக்காக சேவை செய்கின்ற இயக்கமாகும். தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகள் தான் பிரதான இயக்கம். ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இளைஞராக இருக்கிறார். அவரும் அவரது கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்துவதற்காக பல்வேறு வகைகளில் அரசியல் செய்கிறார்.
தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பாக பணியாற்றினார். அவருக்கு ஒரு பதவி கிடைத்தது. அதுபோல எல். முருகன் பாரதிய ஜனதா தலைவராக இருந்தபோது வேல் யாத்திரை நடத்தினார். இதையடுத்து மத்திய அமைச்சர் பதவி அவருக்கு கிடைத்தது. அதுபோல பதவிக்காக தற்போதைய தலைவர் அண்ணாமலை அரசியல் செய்து வருகிறார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ன செய்ய வேண்டுமோ அதனை சிறப்பாக அ.தி.மு.க. செய்து வருகிறது. அ.தி.மு.க., தி.மு.க.வினரின் ஊழல்களை அவ்வப்போது வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.
அதனை மக்கள் மத்தியில் வெளிப்படுத்த எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. நாங்கள் தி.மு.க.வினரின் குறைகளை அமைதியான முறையில் தெரிவித்து வருகிறோம். அ.தி.மு.க. எப்போதும் மக்கள் விரும்பும் இயக்கமாகும். ஆனால் பாரதிய ஜனதாவின் சில கூட்டங்களில் அதிகம் பேர் வருகிறார்கள். அதற்காக பிரதான எதிர்க்கட்சி ஆகிவிட முடியாது. இறை எங்கே இருக்கிறதோ அங்கே அதிகமாக காக்கா கூடும். பா.ஜனதாவுக்கு கூடுவது காக்கா கூட்டம். காலை நாகூரில் அதிகளவில் புறாக்கள் இருக்கும்.சிறிது நேரத்தில் அந்தப் புறாக்கள் அனைத்தும் வேளாங்கண்ணிக்கு சென்றுவிடும். ஆனால் அ.தி.மு.க.வுக்கு கூடுவது கொள்கை கூட்டம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.