பசுமைத் தாயகம் சார்பில், ‘சென்னை தூய காற்றுச் செயல் திட்டம்’ வரைவு அறிக்கையை நாளை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிடுகிறார்.
காற்று அனைவருக்கும் பொதுவானது. ஏழை, பணக்காரர், மதம், மொழி என மக்களின் அடையாளங்கள் வேறுபட்டாலும் நாம் எல்லோரும் ஒரே காற்றை தான் சுவாசிக்கின்றோம். தூய காற்று ஒரு அடிப்படை மனித உரிமையும் கூட. ஆனால், இன்று நகர்ப்புறங்களில் தூய காற்று காணக்கிடைக்காத அதிசயம் ஆகிவிட்டது. பெருநகரங்களில் வானம் அதன் நீல நிறத்தை இழந்துவிட்டது! உயரைக் காக்கும் சுவாசக் காற்றே, இன்று மக்களின் உயிரை எடுக்கும் நஞ்சாகவும் மாறிவிட்டது. இதற்கு மனித தவறுகளே காரணமாகும்.
அதே நேரத்தில், நம்பிக்கை அளிக்கும் விதமாக காற்று மாசு சிக்கலுக்கு அறிவியல் பூர்வமான தீர்வுகளும் இருக்கின்றன. தனது மக்களுக்கு மிகத்தூய்மையான காற்றை அளிக்கும் மேற்கு ஐரோப்பிய நாட்டு நகரங்களை போல சென்னை பெருநகரையும் மாற்ற முடியும். அரசியல் உறுதி இருந்தால் அது முற்றிலும் சாத்தியமானது தான்.
காற்று மாசுபாட்டினால் உலகில் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் இறந்து போகின்றனர். உலகிலேயே மிகவும் மாசுபட்ட நாடு இந்தியா! இந்தியாவில் 12 லட்சம் பேர் காற்று மாசுபாட்டினால் சாகிறார்கள். இந்தியர்களின் மரணத்துக்கு மூன்றாவது பெரிய காரணம் காற்று மாசுபாடுதான். இந்தியாவில் 8 இறப்புகளில் ஒன்றிற்கு காற்று மாசுபாடு காரணமாக உள்ளது. சென்னை மாநகரம் இந்திய அளவில் மிகவும் மாசுபட்ட இரண்டாவது நகரமாக உள்ளது.
இந்நிலையில், பசுமைத் தாயகம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள சென்னை தூயக் காற்றுத் திட்டம் என்ற ஆவணத்தின் வரைவு நகல் சென்னையில் தியாகராயர் நகர் பசுல்லா சாலை சந்திப்பில் உள்ள தி பென்ஸ் பார்க் விடுதியில் நாளை (05.06.2021) காலை 11.00 மணிக்கு நடைபெறவிருக்கும் நிகழ்வில் வெளியிடப்படவுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் இந்த வரைவை வெளியிடவுள்ளார்.