சாலையில் சென்ற பெண்ணை இடித்துச் சென்ற தனியார் பள்ளி வாகனத்தை நிறுத்தி தட்டிக் கேட்ட தனியார் நிறுவன ஊழியரை, போக்குவரத்து காவலர் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவர், உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதற்கிடையில், தனியார் பள்ளி வாகனம் ஒன்று, சாலையில் சென்ற பெண்ணை இடித்துவிட்டு நிற்காமல் சென்றதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அதனை தட்டிக்கேட்ட தன்னை போக்குவரத்து காவலர் தாக்கியதாகவும் இதற்கு ஒரு நீதி வேண்டுமென காவல் ஆணையர் அலுவலகத்தில் அந்த தனியார் நிறுவன உணவு டெலிவரி ஊழியர் புகார் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் போக்குவரத்து காவலர் ஒருவர், சாலையில் பலர் முன்னிலையில் தனியார் நிறுவன ஊழியரை அடிக்கும் காட்சி வீடியோவாக சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய போக்குவரத்து முதல்நிலைக் காவலர் சதீசை, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடை மாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM