சென்னை: வார்டுகளில் உள்ள குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய ஆண்டுதோறும் பணமாகத் தருவதா, பொருளாகத் தருவதா என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் சாலை ஒட்டும்பணி, தெருவிளக்கு சரி செய்யும் பணி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஆண்டுதோறும் 10 லட்சம் ரூபாயை வார்டு உதவி பொறியாளர்களுக்கு பராமரிப்பு நிதியாக வழங்க வேண்டும் என மாநகராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் பணமாக அளிக்கலாமா அல்லது பொருளாக வழங்கலாமா என்று மாநகராட்சி அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “வார்டு உதவி பொறியாளர்களுக்கு, பராமரிப்பு நிதி வைப்பு தொகையாக வழங்கும்பட்சத்தில், அவை செய்யாத அல்லது பழுது இல்லாத பணிகளை மேற்கொண்டதாக கணக்குக் காட்டி, அப்பணம் கொள்ளையடிக்க வாய்ப்புள்ளது. பெரும்பாலான பணிகள், ஒப்பந்த அடிப்படையில் செய்யப்படுகிறது. அதற்கான நிதியும் வழங்கப்படுகிறது. மேலும், சாலை ஒட்டும் பணிக்கு ‘கோல்டு தார்’ மூட்டை வழங்கப்படுகிறது.
எனவே, ஒவ்வொரு வார்டுக்கும் 100 மூட்டை ‘கோல்டு தார்’ வழங்கலாமா என ஆலோசித்து வருகிறோம். தெரு விளக்குளை பொருத்தவரையில், மாநகராட்சி மின்சார துறை பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறது. கவுன்சிலர்கள் அல்லது பொதுமக்கள் புகாரின் அடிப்படையில், உடனடியாக சரி செய்யப்படுகிறது. எனவே, பணத்திற்கு பதிலாக, பொருட்களை வழங்கலாம் என ஆலோசித்து வருகிறோம். ஓரிரு வாரத்தில் பணமா, பொருளா என்பது தெரிவிக்கப்படும்” என்று தெரிவித்தனர்.