கோவை மாவட்டத்தில் மலைகளை கடந்து வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசிக்க சென்ற பக்தர் ஒருவர் அங்கிருந்த அடியாருக்கு காணிக்கையாக பணத்தை கொடுக்க, பணத்தை வாங்க மறுத்த அவர், மரம் நடுங்கள் என்று தெரிவித்த அறிவுரை பக்தர்களை நெகிழ வைத்துள்ளது.
பணம் தேடி அலையும் உலகில் மன அமைதி தேடி கோவை வெள்ளிங்கிரி மலையில் உள்ள சிவன்கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
அண்மையில் அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் தன் சகாக்களுடன் வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசித்து வந்தார்.
இந்த நிலையில் மலைகளை கடந்து கோவிலுக்கு சென்ற மகுழ்ச்சியில் அங்கு பக்தர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த சிவனடியாருக்கு பக்தர் ஒருவர் காணிக்கையாக பணம்கொடுத்ததாக கூறப்படுகின்றது.
அதனை வாங்க மறுத்த சிவனடியார், பணத்துக்கு பதிலாக பூமியில் மரம் நடும்படியும், மலையில் பிளாஸ்டிக் கழிவுகளை வீசிச் செல்லாதீர்கள் எனவும் அறிவுரை வழங்கினார்.
இறைவன் பக்தர்களிடம் பணத்தை விரும்புவதில்லை என்றும் ஒழுக்கம் தான் இறைவனை அடையும் வழி எனவும் அந்த சிவனடியார் தெரிவித்தார்.
வாழ்க்கையில் நிம்மதி தேடி மலையேறி சென்றவர்களிடம் மரம் நடவும், ஒழுக்கத்துடன் வாழவும் சிவனடியார் கூறிய அறிவுரை சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.