புதுடெல்லி: ‘காலணிகளுக்கான தரக்குறியீடுகளை வரும் 2023ம் ஆண்டு ஜூலை முதல் கட்டாயம் அமல்படுத்த வேண்டும்,’ என ஒன்றிய அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ஒன்றிய அரசின் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் தரப்பில் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘ஷூ, செருப்பு, உள்ளிட்ட மொத்தம் 13 வகையிலான காலணிகளுக்கு ஐ.எஸ் தர சான்றிதழ் வகுக்கப்பட்டுள்ளது. இதனை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டு உள்ளது. வரும் 2023ம் ஆண்டு, ஜூலை முதல் தேதி முதல் கட்டாயம் செயல்பாட்டுக்கு வர வேண்டும். இதில், ஹவாய் ரப்பர் செருப்புகளுக்கு ஐ.எஸ்: 10702-1992வும், பி.வி.சி ரக காலணிகளுக்கு ஐ.எஸ்.6721-1972 என தர சான்றிதழ் வகுக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, தூய்மை பணியாளர்களுக்கான காலணிகளுக்கு ஐ.எஸ் 16994-2018 என பலவிதமான தரக் குறியீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக காலணிகளுக்கான இந்த தரக்குறியீடு முடிவை இரண்டு முறை ஒன்றிய அரசு ஒத்திவைத்திருந்த நிலையில் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.