சென்னை: போதைப் பொருள் விவகாரம் உலகளாவிய பிரச்சினை. அதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த 3-ம் தேதி வெளியானது. சென்னை சத்யம் திரையரங்கில் இத்திரைப்படத்தை கமல்ஹாசன் தனது ரசிகர்களுடன் அமர்ந்து ரசித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
முதன்முதலில் ‘மரோசரித்ரா’ திரைப்படத்தை ஆந்திராவில் வெகுவாக பாராட்டினார்கள். அதேபோல, ‘சகலகலா வல்லவன்’ திரைப்படத்தை பெரிதும் எதிர்பார்த்தார்கள். வெளிநாடுகளில் 2 ஆயிரம் திரையரங்குகளில் ‘விக்ரம்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் ரிலீஸ் போல என் வாழ்நாளில் பார்த்ததில்லை. தமிழ் படங்களுக்கும் இது முதல்முறை.
உலகளாவிய பிரச்சினை
போதைப் பொருட்கள் பற்றி 80-களில் நான் பதற்றப்பட்டேன். அப்போதே ஒரு ஆண்டுக்கு 750 கிலோ கஞ்சா நடமாட்டம் இருந்தது. அப்போது அசட்டையாக இருந்துவிட்டோம். அதன் விளைவாக, இப்போது அது பல டன்னாக மாறியிருக்கலாம்.
போதைப் பொருள் என்பது உலகளாவிய பிரச்சினை. தென் அமெரிக்காவில் இந்த போதைப் பொருள், அரசியலில் புகுந்து நாட்டையே கைப்பற்றியதை நாம் சரித்திரமாக பார்த்திருக்கிறோம். எனவே, இதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதை முன்னறிவிப்பாக சொல்லும் ‘விக்ரம்’. இப்படத்துக்கு மக்கள் ஆதரவு பிரமாதமாக இருக்கிறது. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.